73 வெள்ளி சேவைக்கட்டணம்; ஏர் ஆசியா ஆட்சேப இயக்கம்

கோலாலம்பூர், ஆக. 10-
பயணிகளிடம் மேலும் கூடுதலாக 23 வெள்ளி சேர்த்து 73 வெள்ளியை வசூலிக்கத் தொடங்கிய ஏர் ஆசிய விமான நிறுவனம் கூடவே ஓர் ஆட்சேப இயக்கத்தையும் (பெட்டிஷன்) தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் இரவில் தொடங்கப்பட்ட இந்த பெட்டிஷனுக்கு ஆதரவாக இதுவரை 28,568 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த அளவுக்கதிகமான பயணிகள் சேவைக் கட்டணத்தை ஏர் ஆசியா எதிர்க்கிறது என்பதை உணர்த்த இது தொடங்கப்பட்டிருப்பதாக ஏர் ஆசியா அறிக்கை தெரிவித்தது.
கேஎல்ஐஏ 2 விமான நிலையம், மலிவுக் கட்டண விமான நிலையமாக வடிவமைக்கப்பட்டது. ஆனால் சகல வசதிகளும் நிறைந்த கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள வசதிகளுக்கு ஈடாக அது இல்லை என்ற நிலையிலும் அதே பயணிகள் சேவைக் கட்டணத்தை வசூலிப்பது நியாயமற்றது என ஏர் ஆசியா கூறிவருகிறது.
இந்த உயர்ந்த கட்டணம் பயணிகளுக்கு பெரும் சுமையைக் கொடுக்கும். கடந்த 2018ஆம் ஆண்டு வரை கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் பயணிகளின் சேவைக்கட்டணம் குறைவாகவே இருந்தது. அது ஏன் இவ்வளவு உயர்த்தப்பட்டது என்ற காரணமே தெரியவில்லை. இதனால் சுற்றுலாத்துறையையும் பாதிக்கும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது மலேசியா மீதான ஈர்ப்பு குறையும். கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து ஆசியான் நாடுகளுக்கு அப்பால் பயணம் செய்வோருக்கான கட்டணங்கள் 2 மடங்காகியிருக்கின்றன. 2016ஆம் ஆண்டு 32 வெள்ளியாக இருந்த அக்கட்டணம், 2017ஆம் ஆண்டு 50 வெள்ளியாகி தற்போது 73 வெள்ளியாக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவன அறிக்கை தொடர்ந்து கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here