500 விநாயகர் சிலைகளைச் சேகரித்துள்ளார் டாக்டர் மகேந்திரன் மணியம்

‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் ஓங்கார வடிவமாய், தும்பிக்கையோடு நம்பிக்கைக் கொடுக்கும் தனிப்பெரும் தெய்வமான ஐங்கரனை, ஆலய மூலஸ்தானத்தில் தனியாக பார்த்தாலே அத்தனை இன்பம் இதயத்தில் மெருகேறும்.
அப்படி இருக்க, 500 வடிவங்களில் ஒரு வீட்டில் குடியேறி அழகழகாய் காட்சி கொடுத்தால் அந்த உணர்வு எப்படி இருக்கும்? ஓர் ஆசைக்காக அவரை சேகரிக்க தொடங்கி பின்னர், அதனை ஒரு விநோத பொழுது போக்கு பழக்கமாக்கி கொண்டிருக்கின்றனர், சிலாங்கூர்; ஸ்ரீ கெம்பாங்கானில் வசிக்கும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகமான, உப்சி, இணைப் பேராசிரியர் டாக்டர் மகேந்திரன் மணியம் இந்திரா சாந்தி தம்பதியர்.
கடந்த 15 ஆண்டுகளில், மகேந்திரனின் எண்ணங்களில் ஆட்சி செய்து வரும் விநாயகப் பெருமான் அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் சிறியதும் பெரியதுமாய், தகடிலும் தங்கமுமாய், செம்பிலும் வெள்ளியுமாய், பல்வேறு வண்ணங்களில் வடிவெடுத்து நின்றிருந்தது கண்களோடு உள்ளத்தையும் கொள்ளைக்கொள்ளச் செய்தது.
சாஸ்திர பிரகாரம், 32 வடிவங்களில் மட்டுமே இருக்க வேண்டிய விநாயகப் பெருமான் இன்று வியாபார ரீதியாக 300 வடிவங்களையும் கடந்து நிற்பதால், தமக்குள் ஏற்பட்ட ஓர் அழைப்பு மற்றும் ஈர்ப்பின் அடையாளமாக விநாயகரை சேகரிக்க வேண்டும் என்ற ஆசையும் ஞானமும் தமக்கு பிறந்ததாக மகேந்திரன் தெரிவித்தார். ‘பெரிய காதுகள், கரங்கள், தொந்தி என்று பார்வையில் பக்தர்களைக் கவர்ந்து நிற்கும் விநாயாரைச் சேகரிப்பதில் எனக்கு அலாதி ஆர்வம்,’’ என அவர் கூறினார்.
‘விநாயகர் என்பதால் இந்தியாவில்தான் அவரது சிற்பங்கள் அழகழகாக பல்வேறு வடிவங்களில் கிடைக்கும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால், ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து, மியன்மார், சீனா, போன்ற நாடுகளில், சிற்பங்களை செதுக்கும் கலை வல்லுனர்கள் நிறைந்து கிடக்கின்றார்கள்,’’ என்றும் மகேந்திரன் கூறினார்.
திருமணமாகி பிள்ளைகள் பிறந்த பின்னரே, இந்த பொழுது போக்கு தமது கணவருக்கு வந்ததால், அதனை இன்னும் அதிகரிக்கச் செய்ய கணவனும் மனைவியும் கூட்டணியாக இதனை மேற்கொண்டு வருவதாக இந்திரா சாந்தி தெரிவித்தார்.
குறிப்பாக, புதுமனை புகுவிழா, பிறந்த நாள் மற்றும் விழாக் காலங்களின்போது, நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் மூலம் விநாயகரே வீடு தேடி பரிசாக வந்து சேர்ந்துவிடுவதால், வீட்டில் நிறைந்திருக்கும் அவரை சுத்தப்படுத்தி பாதுகாப்பது தமது கடமை என்றும் கூறினார்.
பழக்க வழக்கமோ அல்லது பொழுது போக்கோ, குடும்பத்தில் ஒருவரிடமிருந்து தொடங்கும் ஒன்று, அடுத்த தலைமுறைக்கும் வாழையடி வாழையாக தொடர்ந்து விடும் என்ற எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த தம்பதியரின் பிள்ளைகளும் இதனைக் கடைபிடித்து பாதுகாப்பார்களா என்று கேட்டபோது, ‘’உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இல்லை, அவர்களுக்கு அது குறித்த ஆர்வம் இல்லை.
விநாயகரை அவர்கள் கடவுளாக பார்ப்பதால், அதனை சேகரிக்கும் ஒரு பொருளாக கருதவில்லை’’, என்று இந்திரா சாந்தி தெரிவித்தார்.
விநாயகர் என்றாலே விக்னங்களைத் தீர்ப்பவர் என்பதால், உருவமாய் அருமாய் வீடு முழுக்க வாசம் செய்யும் அவர், கனவிலோ அல்லது நனவிலோ வந்து காட்சியளித்த அனுபவங்கள் உண்டா என்ற கேள்விக்கும் இந்தம்பதியர் அபூர்வமான பதிலை வைத்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − ten =