
பிரதமர் இஸ்மாயில் சப்ரி நேற்று அறிவித்த புதிய அமைச்சரவையில் மொத்தம் 31 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால், துணைப் பிரதமர் பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் திங்கட்கிழமையன்று பதவியேற்றுக் கொள்வார்கள். அம்னோ மற்றும் பெர்சத்துவும் தலா பத்து அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளன. மேலும், காபோங்கான் பார்ட்டி சரவாக் ( ஜிபிஎஸ்) கூட்டணியின் சார்பில் நான்கு அமைச்சர்களும் அதில் இடம்பெற்றுள்ளனர். பாஸ் கட்சியின் சார்பில் மூன்று அமைச்சர்கள் இடம் பெற்றுள்ள வேளையில், தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளான பார்ட்டி பெர்சத்து சபா ( பிபிஎஸ்), மசீச மற்றும் மஇகா ஆகிய கட்சிகளுக்குத் தலா ஓர் அமைச்சர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஸிஸ் கட்சி சார்பற்றவர் ஆவார். முந்தைய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் அமைச்சரவையுடன் ஒப்பிட்டால், அம்னோவுக்கு மட்டுமே கூடுதலாக ஓர் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இதர கட்சிகளுக்கு அதே எண்ணிக்கையிலான பதவிகளே வழங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட முந்தைய அமைச்சரவையைப் போன்றே புதிய அமைச்சரவையும் இருக்கும் என்று நேற்று முன்னதாக பிரதமர் இஸ்மாயில் அறிவித்திருந்தார். அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மீண்டும் மூத்த அமைச்சர் பதவிகளை அவர் வழங்கியுள்ளார். துணைப் பிரதமர் பதவிக்கு எவரையும் அவர் நியமிக்கவில்லை. இஸ்மாயில் சப்ரிக்கு மிக நெருக்கமானவரான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி அனைத்துலக வாணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பதவிக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். மேலும், அதே கட்சியைச் சேர்ந்த டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுடின் மீண்டும் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்மாயிலின் நெருங்கிய சகாவான டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஸிஸ் மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சராக இருந்த கைரி ஜமாலுடின், தற்போது சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகாறும் சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் அடாம் பாபா, கைரி வகித்துவரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மசீசவுக்கும் மஇகாவுக்கும் மீண்டும் அதே அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மசீசவின் டத்தோஸ்ரீ வீ கா சியோங் போக்குவரத்து அமைச்சராகவும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மனிதவள அமைச்சராகவும் மீண்டும் நியமனம் பெற்றுள்ளனர்.