30 வருடங்களுக்கு பின்னர் தன்னை ஆண் என கண்டுகொண்ட பெண்

0

மம்தா பானர்ஜி ஆளுகிற மேற்கு வங்காள மாநிலத்தில், பிர்பம் நகரை சேர்ந்தவர் அந்தப் பெண். 30 வயது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக அவருக்கு ஒரு ஆணுடன் திருமணம் நடந்தது. இருவரும் இத்தனை ஆண்டுகளாக இனிய மணவாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்கள்.


இந்த நிலையில் அந்தப் பெண், அடிவயிற்றில் கடுமையான வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் கொல்கத்தா நகரத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அங்கு அவருக்கு புற்று நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் அனுபம் தத்தாவும், புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் சமன்தாசும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தினர்.

அதில் இதுவரை பெண்ணாக தோன்றி வந்த அந்த பெண், பெண்ணே அல்ல, ஆண் என கண்டறிந்து அதிர்ச்சியில் உறைந்து போயினர். அவருக்கு பெண்ணுக்குரிய உடல் உறுப்புகள் இருந்தன. அவரது குரலும் பெண் குரல்தான். ஆனால் அவருக்கு பிறப்பிலேயே கருப்பையும், சினைப்பைகளும் இல்லை என்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்கும் வந்தது இல்லையாம்.

இதுபற்றி டாக்டர் அனுபம் தத்தா கூறியதாவது:-

இவருக்கு நேர்ந்திருப்பது ஒரு அபூர்வமான நிலை ஆகும். இப்படி 22 ஆயிரம் பேரில் ஒருவருக்கு வாய்ப்பது உண்டு. இவருக்கு ஆண்களுக்கு உரிய ‘எக்ஸ் ஒய் குரோமசோம்’ தான் உள்ளது. பெண்களுக்குரிய ‘எக்ஸ்எக்ஸ் குரோமசோம்’ இல்லை என பரிசோதித்து அறிந்தோம்.

அடிவயிற்றில் வலி என்று அவர் சொன்ன உடன் தேவையான பரிசோதனைகளை செய்தபோது, ஆண்களுக்கு அமைந்திருக்கக்கூடிய விதைப்பைகள் அவருக்கு உடலுக்குள் அமைந்திருந்ததை கண்டோம்.

அவருக்கு பயாப்சி பரிசோதனை செய்தோம். அதில் அவருக்கு விதைப்பை புற்றுநோய் இருப்பதை கண்டோம். தற்போது அவருக்கு கெமோதெரபி சிகிச்சை அளிக்கிறோம். அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளது.

அவருக்கு உடலுக்குள் விதைப்பைகள் அமைந்திருந்தாலும், அவை உரிய வளர்ச்சியை பெறவில்லை. டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனும் சுரக்கவில்லை. அவரில் சுரந்துள்ள பெண் ஹார்மோன் காரணமாக அவர் பெண்ணைப் போன்ற தோற்றத்தை பெற்றுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிறந்து வளர்ந்து 30 வருடங்களான நிலையில் அவர் தான் ஒரு பெண் அல்ல, ஆண் என அறியவந்தபோது, அவரது மனநிலை எப்படி இருந்தது என்று கேட்டபோது டாக்டர் அனுபம் தத்தா நேரடியாக பதில் அளிக்கவில்லை.

ஆனால், “அவர் பெண்ணாகவே வளர்ந்திருக்கிறார். 9 வருடங்களுக்கு முன்பாக ஒரு ஆணை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அவருக்கும், அவரது கணவருக்கும் நாங்கள் கவுன்சிலிங் (ஆலோசனை) தருகிறோம். அவர்கள் தங்கள் வாழ்க்கையை இப்படியே இணைந்தே தொடரும்படி கூறுகிறோம்” என கூறினார்.

இந்த தம்பதியர் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால் இந்த முயற்சி தோல்வியில் முடிந்து இருக்கிறது. இந்த பெண்ணின் தாய்வழி சித்திமார் 2 பேருக்கும் கடந்த காலத்தில் இதே பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறதாம்.

இதுபற்றி டாக்டர் அனுபம் தத்தா குறிப்பிடுகையில், “இது மரபணு கோளாறு. இப்போது இந்தப் பெண்ணை பரிசோதித்து அறிந்த பின்னர் அவரது 28 வயது சகோதரிக்கு பரிசோதனைகள் நடத்தினோம். அவரும் இந்தப் பெண்ணைப்போலவே பெண் தோற்றத்தில் ஆணாகவே இருக்கிறார்” என்று கூறி அதிர வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =