3 கோடி சுற்றுப் பயணிகளை மலேசியாவிற்கு கொண்டு வருகிறது ஏர் ஆசியா

11 ஆண்டுகளுக்கு முன் வெறும் இரண்டு விமானங்களில் ஆரம்பித்த ஏர் ஆசியா, தற்சமயம் வருடத்திற்கு மூன்று கோடி சுற்றுப் பயணிகளை மலேசியாவிற்கு கொண்டு வந்து சேர்க்கும் முதுகெலும்பாக இருக்கிறது என்று ஏர் ஆசியாவின் தலைமைச் செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் நேற்று கூறினார்.

குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே விமான பயணம் என்று இருந்த ஒரு நிலையை மாற்றி, விமானத்தில் பறக்க விரும்புபவர்கள் அனைவரும் பறக்கலாம் என்ற கருப்பொருளில் சலுகை விலையில் விமானச் சேவையை வழங்க ஆரம்பித்தது ஏர் ஆசியா.
அதோடு நின்று விடாமல், அடித்தட்டு மக்களை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் ஏர் ஆசியா தனது பங்கினை ஆற்றி இருக்கிறது. தற்சமயம் ஏர் ஆசியா நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 80 விழுக்காட்டினர் பி40 எனப்படும் அடித்தட்டு வருமானத்தை கொண்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களுக்கு ஒரு நிலையான வாய்ப்பு கொடுப்பதோடு மட்டுமல்லாமல், சிறப்பாக சேவையாற்றக் கூடியவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் ஏர் ஆசியா வழங்க மறந்ததில்லை.
குறிப்பாக இன்று சரித்திரப்பூர்வமான அதிகாரப்பூர்வ புதிய ஏர்பஸ் ஹ321 நியோ விமானம் வரவேற்பு விழாவில், எனது உரையை வாசித்த முகேஷ் என்ற இளைஞர் ஒரு சாதாரண பொறியியல் அதிகாரியாக தனது பணியை ஆரம்பித்தார். ஆனால் இன்று ஏர் ஆசியா கொள்முதல் செய்து இருக்கக்கூடிய ஹ320 ஏர்பஸ் ஹ321 ரக நியோ விமானத்தின் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னோடியாகவும் அவர் செயல்பட்டிருக்கிறார். அதனால்தான் இன்று வரவேற்புரையை அவர் வழங்கினார்.
இதைப்போல் ஒரு சாதாரண தபால் பட்டுவாடா இளைஞனாக இருந்த குகன் என்பவர் தற்சமயம் ஒரு விமானியாக வளர்ச்சி பெற்றுள்ளார்.
இவை அனைத்தும் ஏர் ஆசியா நிறுவனத்தின் சாதனைகளில் ஒன்று என்று பத்திரிகையாளர்களிடம் பேசிய பொழுது டோனி பெர்னாண்டஸ் கூறினார்.
சலுகை விலையில் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை கொண்டுவருவதற்கு ஏர் ஆசியா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற வேளையில், தற்சமயம் இவ்விழாவிற்கு வந்திருக்கின்ற சுற்றுலாத்துறை அமைச்சர் முகம்மது கெத்தாப்பி இடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றேன். மலேசியாவிற்கு வரும் சுற்றுப் பயணிகளுக்கு மலிவான விலையில் நிறைவான களிப்பு அளிக்கும் வகையில் சுற்றுப்பயணம் அமைந்திருக்க வேண்டும். அதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் அமைச்சர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − two =