27 கள்ளப்பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டுகள்; ஸாஹிட்டை விடுதலை செய்ய வேண்டும்: வழக்கறிஞர் வாதம்

டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடிக்கு எதிராக கொணரப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்பதால் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திடம் நேற்று வலியுறுத்தப்பட்டது. அம்னோ தலைவரான ஸாஹிட்டுக்கு எதிராக இருபத்தேழு கள்ளப் பணப் பரிமாற்ற குற்றங்களை அரசுத் தரப்பினர் சுமத்தியிருப்பதற்கு தற்காப்புத் தரப்பினர் தங்கள் வலுவான ஆட்சேபத்தை தெரிவித்துக் கொள்கின்றனர் என்று ஸாஹிட்டின் தலைமை வழக்கறிஞர் ஹிஷ்யாம் தே போ தெக் தமது வாதத் தொகுப்பில் குறிப்பிட்டார். இவ்வழக்கானது அரசுத் தரப்பின் முறைகேடான நடவடிக்கையை அல்லது பொறுப் பற்றத்தன்மையைக் காட்டுகிறது. திடமான ஆதாரங்கள் எதுவும் உள்ளதா என்பதை ஆராயமலேயே அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது என்று அவர் சாடினார். யாயாசான் அக்கால்புடி அறக்கட்டளைக்குச் சொந்தமான கோடிக்கணக்கான பணத்தைக் முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஸாஹிட் மீது நாற்பத்தேழுழ குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவற்றில் 12 குற்றங்கள் நம்பிக்கை மோசடி சம்பந்தப்பட்டவை ஆகும். மேலும் 8 குற்றங்கள் லஞ்சஊழல் தொடர்புடையவை. அவற்றைத் தவிர்த்து அவர் மீது 27 கள்ளப்பணப் பரிமாற்ற குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன. ஸாஹிட் மீது சுமத்தப்பட்டுள்ள 27 கள்ளப் பணப் பரிமாற்ற குற்றச்சாட்டுகள் பற்றி குறிப்பிட்ட ஹிஷ்யாம், அப்பணம் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம்தான் கிடைக்கப் பெற்றன என்பதை நிரூபிக்க அரசுத் தரப்பினர் தவறிவிட்டதாகச் சொன்னார். முறைகேடாகப் பயன் படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பணத்தின் ஒரு பகுதியான 59 லட்சம் வெள்ளியை தாங்கள்தான் நன்கொடை அளித்ததாக இரண்டு நபர்கள் சாட்சியமளித்துள்ளனர்.எனவே, அது சட்டவிரோதப் பணம் அல்ல என்பது உறுதியாகிறது என்றும் அந்த வழக்கறிஞர் தெரிவித்தார். அக்கால்புடி அறக்கட்டளைக்கு யாயாசான் அல்புகாரி அறநிறுவனம் அளித்ததாகக் கூறப்படும் நன்கொடையை காசோலைகள் மூலம் அல்லாமல் ரொக்கப் பணமாக பைகளில் திணித்துக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று உயர்நீதிமன்ற நீதிபதி லாரன்ஸ் செகுய்ரா கேட்டதற்கு, அக்கேள்விக்கு யாயாசான் அல்புகாரி அறநிறுவனம்தான் பதிலளிக்க வேண்டும் என்று ஹிஷ்யாம் கூறினார்.வழக்குவிசாரணை இன்று தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 11 =