25 பயங்கரவாதத் தாக்குதல்கள் முறியடிப்பு;

0

கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கி நாட்டில் மேற்கொள்ளப்படவிருந்த 25 பயங்கரவாதத் தாக்குதல்களை காவல்துறை முறியடித்திருப்பதாக புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முதன்மை இயக்குனர் டத்தோ அயூப் கான் மைடின் பிச்சை கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள இந்து, கிறிஸ்துவ, பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மீதும் பொழுதுபோக்கு நிலையங்கள் மீதும் இந்தத் தாக்குதலை நடத்த பயங்கரவாதக் கும்பல்கள் திட்டமிட்டிருந்தன என்றார் அவர். தாக்குதலை நடத்துவது, தங்கள் நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவது உட்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பில் 74 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுபாங்ஜெயா யூஎஸ்ஜேயில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் மிகப் பெரிய தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. உளவுத்துறைத் தகவலின் மூலமும் பல்வேறு தரப்பினர் வழங்கிய தகவலின் மூலமும் இந்த தாக்குதலை நாங்கள் முறியடித்தோம்.
இது போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளைத் துடைத்தொழிக்க கடுமையான சட்டம் தேவை. எல்லா நாடுகளிலும் இது போன்ற சட்டங்கள் இருக்கின்றன. மலேசியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த காலங்களை விட இன்றைய காலத்தில் காவல்துறை மாறுபட்ட மிரட்டல்களையும் சவால்களையும் சந்திக்கிறது.
கடுமையான சட்டம் இல்லாமல் போனால் இதையெல்லாம் துடைத்தொழிப்பது மிகவும் சிரமமாகும். இதுவரை 65 மலேசியர்கள் சிரியாவில் உள்ள பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.
இவர்களில் 40 பேர் பெண்களும் பிள்ளைகளும் ஆவர். இவர்களில் பலர் நாடு திரும்ப ஆசைப்படுகிறார்கள். ஆனால் இவர்களை அனுமதிப்பதா என்பதை அரசாங்கம்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் அவர்களைக் கொண்டு வருவது நல்லது. மீண்டும் பொறுப்புள்ள குடிமக்களாக இவர்கள் மாற வழிகாண வேண்டும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × two =