2034 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியை நடத்துவதற்கான பரிந்துரை ஆராயப்படுகிறது !

2034 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியை ஆசியான் நாடுகள் ஏற்று நடத்தும் பரிந்துரை இன்னமும் ஆராயப்படுவதாக தேசிய விளையாட்டு மன்ற தலைமை இயக்குனர் டத்தோ அஹ்மாட் ஷாபாவி இஸ்மாயில் தெரிவித்தார். இதன் தொடர்பான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

அதேவேளையில் அந்த ஆவணங்களை ஆராய்வதற்கு ஏதுவாக தலைநகரில் இவ்வாரம் செயற்குழு கூட்டம் ஒன்று நடைபெறவிருப்பதாகவும் அந்த கூட்டத்துக்கு தாய்லாந்து தலைமை ஏற்கவுள்ளதாகவும் அஹ்மாட் ஷாபாவி தெரிவித்தார்.  2034 ஆம் ஆண்டில் ஆசியான் நாடுகள் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியை ஏற்று நடத்துவதற்கான பரிந்துரைக்கு பெரும்பாலான ஆசியான் நாடுகளின் விளையாட்டு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

2026 ஆம் ஆண்டில் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி, மெக்சிக்கோ, கனடா, அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. 2034 ஆம் ஆண்டில் ஆசியான் நாடுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், அந்தப் போட்டி நான்கு நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அஹ்மாட் ஷாபாவி கூறினார்.

இதுவரை மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகள் மட்டுமே உபசரணை நாடுகளாக போட்டியை நடத்த முன் வந்துள்ளன. எனினும் இதர நாடுகளில் உள்ள அரங்கங்களை பயிற்சிக்கு பயன்படுத்துவது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Post navigation

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 9 =