2021 பட்ஜெட் நலிந்த பொருளாதாரத்தை சீர்படுத்துமா?

பிரதமர் முஹிடினின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையானது நாடு அனுபவித்து வரும் பொருளாதார வீழ்ச்சியைச் சரி செய்யும் வலுவினைக் கொண்டிருக்கிறதா என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
வறியோருக்கு அறிவிக்கப் பட்டிருக்கும் பிரிஹாத்தின் நிதியுதவி கடந்தாண்டை விட குறைவாக இருப்பதாகவும் வங்கிக் கடனைச் செலுத்தும் கால வரம்பை நீட்டிக்காதது கவலையளிப்பதாகவும் நஜிப் குறிப்பிட்டார்.
ஊழியர் சேமநிதியின் இரண்டாவது கணக்கிலிருந்து பணத்தை மீட்பதும் தடைபட்டுள்ளது. இபிஎஃபில் பணம் இல்லாததே அதற்குக் காரணம் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் வழி வேலையிழந்த பி40 பிரிவு தொழிலாளர்கள் மாதமொன்றுக்கு 500 ரிங்கிட் வீதம் மீட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களின் துயரைத் தீர்க்காத, மில்லியன் கணக்கில் வேலையிழந்தோருக்கு வாழ வழிகாட்டாத பட்ஜெட்டுக்கு ஆதரவளிக்காமல் இருப்போரை துரோகிகள் என்று அழைக்கலாமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அதனால்தாம் சில பரிந்துரைகளை தாம் முன் வைத்ததாகவும் அது பற்றி பிரதமர் முஹிடின் யாசின் இன்னமும் வாய் திறவாமல் இருப்பதாகவும் நஜிப் சுட்டிக்காட்டினார்.
2020ஆம் ஆண்டில் சம்பள உதவித் திட்டத்திற்காக 1,500 கோடி ஒதுக்கப்பட்ட வேளையில், 2021ஆம் ஆண்டிற்கு வெறும் 240 கோடி ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாதமொன்றுக்கு ரிம. 4,000க்கும் குறைவாகச் சம்பளம் பெறுவோருக்கு 1,200 வீதம் நிதி வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், இந்தச் சம்பள உதவித் திட்டமானது சுற்றுலாத் துறை ஊழியர்களுக்கு மட்டுமே என்றும் அதில் ஈடுபட்டுள்ள 70,000 முதலாளிகள் பயனடைவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2020ஆம் ஆண்டில் அதன் மூலம் 330,000 முதலாளிகள் பயனடைந்துள்ளதாக நஜிப் சுட்டிக் காட்டினார்.
2020இல் 27 லட்சம் தொழிலாளர்கள் பயனடைய நிதி ஒதுக்கப்பட்ட வேளையில், 2021இல் அதில் 900,000 பேர் மட்டுமே பயனடைய வகை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதனை ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்பதை தாம்தான் தீர்மானிக்க வேண்டுமென்றும், தமது பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொள்ளுமா என்பதை அது பொறுத்துள்ளது என்றும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.
முஹிடினின் 32,200 கோடி ரிங்கிட்டுக்கான பட்ஜெட் அங்கீகரிக்கப்படாவிட்டால், முஹிடின் புதிய தேர்தலுக்கு வழி விட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here