2021 ஆம் ஆண்டு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் வெற்றி பெறுமா?

இரா. தியாகராஜன்,
தாமான் சயின்டெக்ஸ், ஜொகூர்
கே. மக்களவை என்பது மக்களின் பிரச்சினையை பேசும் தளம். ஆனால், அவர்களுக்குள்ளேயே காரசாரமாக விவாதம் செய்து கொண்டால் மக்கள் பிரச்னைக்கு எங்கே தீர்வு காண்பது?

ப: மக்கள், நாட்டை ஆளக்கூடிய தலைவர்களை நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்தால் நீங்கள் கூறுவதுபோல் அவர்கள், மக்கள் பிரச்சினைகளை மட்டும் பேசுவார்கள். சமுதாய சுரண்டிகள், ஊழல்வாதிகள், கொள்ளைக்காரர்கள், நிலத்திருடர்கள், மூடர்கள், முட்டாள்கள், குண்டர்களையெல்லாம் நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தால் தங்களுக்கு சாதகமான விவாதங் களைத்தான் அவர்கள் செய்வார்கள். நாடாளுமன்றத்தை விட்டு விடுங்கள். அங்கே மக்களுக்காக பேச வக்கில்லாத ஒரு சில தலைவர்கள் வாட்ஸாப்பில் அள்ளித்தெளிக்கு ஆணவப் பேச்சை என்ன சொல்வது……
கே: சுயநலம் பெரிதா … பொதுநலம் பெரிதா?
ப: ஒரு சமுதாயம் என்பது பல குடும்பங்களை கொண்டது. ஒரு குடும்பம் என்பது பல உறுப்பினர்களைக் கொண்டது. ஒவ்வொரு தனி மனிதனின் வெற்றியும் அவன் சார்ந்த குடும்பத்தின் வெற்றியாகவும், அவன் சார்ந்த சமூகத்தின் வெற்றியாகவும் மாற வேண்டும். ஒரு தனி மனிதனின் வெற்றிக்கு ஓரளவு சுயநலம் தேவைதான். ஆனால், அது அடுத்தவர் களுக்கு தீங்கு விளைவிக்காத சுயநலமாக இருக்க வேண்டும்.


கே: இப்படித்தான் வாழ வேண்டும் என்பவனுக்கும், எப்படியும் வாழலாம் என்பவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ப: எப்படியும் வாழலாம் என்பவன் வாழ்கிறான். இப்படித்தான் வாழ வேண்டும் என்பவன் வாழ்ந்து காட்டுகிறான்.


கே: நாம் பேசுவது புரிந்தவர்களுக்கு புரிந்தால் மட்டும் போதும். மற்றவர்களைப் பற்றி கவலையில்லை. இது சரியான அணுகுமுறையா?
ப: தெரியாத ஒன்றை புரிய வைக்கத்தான் மொழி என்ற ஒன்றே உருவாகியது. புரிந்தவர்களுக்கு பேசிக் கொண்டிருப்பது நேரத்தை போக்குவது. புரியாதவர்களுக்கு பேசி புரிய வைப்பது நேரத்தை பொன்னாக்குவது.

கே: பல வேளைகளில் உண்மை ஊமையாகிவிடுகிறதே?
ப: அது உண்மைதான். ஆனால், இன்றைய தொழில்நுட்பம் மறைக்கப்படும் உண்மைகளை வெளிக்கொண்டுவர உதவுகிறது. கடந்த காலங்களில் கூறப்பட்டு வந்த பொய்ப்பரப்புரைகள் கூட இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியினால் வெட்டவெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது. ஆனால், இந்த புதிய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி சில தலைவர்கள் பொய்யை உண்மையாக்க முயற்சிக்கின்றனர். வாட்ஸாப் புலனங்களில் சில பொய்களை விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி உண்மையாக்கப்பார்க்கிறார்கள். உண்மை சில காலங்களுக்கு ஊமையாகலாம். ஆனால், அதன் வேகம் அதிகரித்தால் புயலாக வெளிப்படும். இந்த உண்மை சில விஞ்ஞான பொய்யர்களுக்கு புரிவதில்லை.

பேனா நண்பர், ஸ்ரீவாணன், கோலாலம்பூ
கே. அண்மையில் நடந்து முடிந்த நியூசிலாந்து பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றிப் பெற்று அதன் தலைவர் ஜெசிந்தா ஏடர்ன் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். அவர் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இந்தியா தமிழ்நாட்டில், சென்னையின் பிறந்த பிரியங்கா இராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றியும் அவரது துறையைப் பற்றியும் தெரிவிக்கவும்?

ப: பிரியங்கா ராதாகிருஷ்ணன் (வயது 41) சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் வளர்ந்து பிறகு நியூசிலாந்திற்கு குடி புகுந்துள்ளார். இந்த குறுகிய காலத்தில் வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று தொடர்ந்து மேம்பாட்டு ஆய்வுகளில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். நியூசிலாந்து ஆக்லாந்தில் உள்ள இந்திய சமூகத்திற்கான சமூக சேவையாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 2006 இல் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியில் சேர்ந்து, கட்சி கொள்கை மேம்பாடு செயல் பாட்டில் பணியாற்றியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின்
பிரதிநிதியாக நியூசிலாந்து நாடாளுமன் றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி பட்டியல் வழியாக இவர் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றார். 2019 அன்று அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடர்ந்து, இன விவகாரங்களுக்கான நாடாளுமன்ற தனி செயலாளராக நியமிக்கப்பட்டார். இவ்வாண்டு அக்டோபரில் நடைபெற்ற நியூசிலாந்து பொதுத் தேர்தலுக்குப்பிறகு ​​தொழிலாளர் கட்சி பட்டியலின் வழி மீண்டும் பாராளுமன்றத்திற்குத் திரும்பி
யுள்ளார். இம்மாதம் அவர் சமூகம் மற்றும் தன்னார்வத் துறை அமைச்சராகவும், பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் இன சமூகங்களுக்கான அமைச்சராகவும், இளைஞர் அமைச்சராகவும், சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் அமைச்சர் பொருப்பேற்ற முதல் இந்திய வம்சாவளியினராக இவர் கருதப்படுகிறார்.


கே: அமெரிக்கா போல் நமது மலேசியாவில் பிரதமர் மலாய்க்காரராகவும் மற்றும் இரு துணைபிரதமர்கள் சீனர், தமிழராகவும் வரும் காலம் எப்பொழுது வரும்?
ப: அங்கே இந்தியர்களின் நலனுக்காக மஇகா போன்ற தனிக் கட்சி கிடையாது. சீனர்களுக்கு என்று மசீச போன்றதொரு தனிக் கட்சி கிடையாது. கருப்பினத்தவர்களின் நலனுக்கென்று ஒரு தனிக் கட்சி கிடையாது. ஆனால், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கருப்பினத்தவர் ஒருவருக்கு மகனாகப் பிறந்து சில காலம் இந்தோனேசியாவில் வாழ்ந்த ஒபாமா அமெரிக்கப்பிரதமராகிவிட்டார். இந்தியாவைச் சேர்ந்த தாய்க்கும், ஜமைக்காவைச் சேர்ந்த தகப்பனாருக்கும் பிறந்த கமலாதேவி ஹாரீஸ் அமெரிக்காவின் துணைப்பிரதமராகி விட்டார். மஇகா, மசீச போன்றதொரு இன அடிப்படையிலான கட்சி இல்லாத போதும் இது எப்படி சாத்தியமானது என்றால் அங்கே ஒரே நேர்கோட்டில் அனைவரது உரிமைகளும் பார்க்கப்படுகிறது. ஒருவரது அரசியல் உரிமை இன அடிப்படையில் பார்க்கப்படவில்லை. இங்கே இனவாதம் இருக்கும் வரை அந்த இலக்கை எட்டிப்பிடிப்பது சாத்தியமில்லை.


செந்தில், செந்தூல்
கே: பாஜகவை தமிழகத்தில் வெறுப்பதற்கு காரணம் என்ன?

ப: பாஜகவுடன் 1990களில் திமுக கூட்டணி வைத்த பொழுது பாஜகவை மக்கள் வெறுக்கவில்லை. பாஜகவுடன் முன்பு அதிமுக கூட்டணி வைத்த பொழுதும் தமிழக மக்கள் பாஜகவை வெறுக்கவில்லை. ஆனால், மோடியின் வருகைக்குப் பிறகு பாஜக மத்தியில் வலுவான கட்சியாக உருவெடுத்து வருவதால் அக்கட்சி மீதும் மோடி மீதும் மதவாத சாயம் பூசப்பட்டு வெறுப்பு அரசியல் பிரசாரம் முழுமையாக முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கு சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை இழந்து விடக் கூடாது என்ற அரசியல் பின்புலமும் வெகுவாக செயல்படுகிறது.


கே: தமிழகம் பெரியார் மண் எனக் கூறப்படுவதற்கு காரணம் என்ன?
ப: ஆரிய இனம், பார்ப்பனர்கள் கூட்டம் தமிழர்களை அடிமைகளாக்கிவிட்டது என்ற முழக்கத்தை பெரியார் ஒரு 80 ஆண்டுகளுக்கு முன் முன்னெடுத்தனால் தமிழகம் பெரியாரின் சிந்தனைக்கு செவிசாய்த்தது. ஜாதி எதிர்ப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு சிந்தனை அவரை தமிழகத்தின் பகலவனாக உருவகப்படுத்தியது.
ஆனால், அவரது சிந்தனைகள் இன்றைய சூழ்நிலையில் இந்து மத எதிர்ப்பு என்ற ஒரே ஒரு பரிணாமத்தை உச்சபட்சமாக கொண்டுள்ளது. அதன் நீட்சியாக மற்ற மதங்களுக்கு மதிப்பும், இந்து மதம் அவமதிப்பும் என்ற புதிய சித்தாந்தத்திற்கு வித்திட்டு வந்தது. பெரியார் 1879 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் பிறப்பதற்கு முன் தமிழகம் என்ன மண்?
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி என்றால் அதற்கென்று ஒரு தனி மரபு இருந்திருக்க வேண்டுமல்லவா? திருவள்ளுவர் மண், ஆழ்வார்கள் மண், நாயன்மார்கள் மண், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றி கோலோச்சி ஆண்ட மண் என்ற அந்த மரபு மீண்டும் உயிர் பெற ஆரம்பித்துள்ளது. அதற்கு எடுத்துக்காட்டு நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு காட்சி கொடுத்த அத்திவரதரை காண பெரியாரின் கொள்கையை தங்களது கட்சிக் கொள்கையாக கொண்டுள்ள திமுக பிரமுகர்கள் முதல் வரிசையில் நின்று வணங்கியதே சாட்சி.

பிரபாகரன், செலயாங்
கே:டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தாக்கல் செய்துள்ள 2021 ஆண்டிற்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் வெற்றி பெறுமா?
ப: 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மரணமடைந்துள்ளதால் 220 பேர் வரும் 26 ஆம் தேதி வாக்களிக்கவுள்ளனர். இதில் குறைந்தது 211 பேர் ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இந்நேரத்தில் கோவிட்- 19 பாதிப்பு எண்ணிக்கை கோலாலம்பூர் நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் எகிறிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் அந்த தேதியில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என்று நம்பலாம்.
இந்த பட்ஜெட்டை ஆதரிப்பது தொடர்பாக அக் கூட்டணி அரசாங்கத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான பெர்சத்து, அம்னோ கட்சி உறுப்பினர் களுக்கிடையே வாக்குவாதம் தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால், அவர்களைவிட அம்னோ கட்சிக்குள்ளே அமைச்சர்களாக இருப்பவர்கள், அமைச்சரவையில் இல்லாதவர்களி டையே நடக்கும் விவாதங்கள் உச்சக்
கட்டத்தில் இருக்கின்றன. அமைச்சர்கள் பட்ஜெட்டை ஆதரிக்கும் வேளை யில் அமைச்சர் அல்லாதவர்கள் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரஸாக் தலைமையில் தங்களது எதிர்ப்புக் கருத்தை வெளிப் படைய¹hக கூறி வருகின்றனர். அம்னோ கட்சியின் தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ ஸைட் ஹமிடியும் தனது எதிர்ப்பை மறைமுகமாக தெரிவித்து வருகிறார்.
உண்மையில் இந்த பட்ஜெட் ஏற்றுக் கொள்ளப்படுவதும் ஏற்றுக் கொள்ளப்படாததும் முஹிடின் பிரதமராக இருப்பதும், அவரது பதவி இந்த நாடாளுமன்ற தொடரோடு பறிபோவதும் நஜிப்பின் கையில்தான் இருக்கிறது. முற்பகல் பகை 26 ஆம் தேதி பிற்பகலில் வெளிப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here