
நேற்று முன்தினம் குறைந்த பட்ச சம்பளத்தை 1,500 ரிங்கிட் டாக அதிகரிப்பதாக அரசு அறிவித்த பின்னர், தொழிலாளர் சங்கங்களும் தொழிலாளர்களும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின் றனர்.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) இன் தலைவர் கூறும்போது, இது தங்களின் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என குறிப்பிட்டார்.
1,200 ரிங்கிட்டை குறைந்த பட்ச சம்பளமாக வைத்துக் கொண்டு குடும்பத்தை நிர்வகிக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. விலைவாசி, பொருள்களின் விலையேற்றம் போன்றவைகளால் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி இருப்பதால் பல்வேறு சங்கங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அரசு அதனை 1,500 ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த ஊதிய உயர்வை அறிவித்த பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோபுக்கு தமது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
300 ரிங்கிட்டைக் கூடுதலாக பெறுவது பெரும் திருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் இதன்மூலம், தொழிலாளர்களின் சிரமம் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஊதிய உயர்வானது 5 தொழிலாளர்களுக்கு மேல் செயல்படும் நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்குப் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பள உயர்வை ஏற்றுக் கொள்ளாத முதலாளிகளின் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மனிதவள அமைச்சும், அதன் அதிகாரிகளும் அடிக்கடி தொழிற்சாலைகளுக்கு வருகை தந்து அங்கு பரிசோதனையை நடத்த வேண்டும். இதனிடையே நோர்த் சவுத் நிறுவனத்தின் அதிகாரி கூறும்போது, இந்தக் குறைந்தபட்ச சம்பளத்தை அரசு எவ்வாறு கண்காணிக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
குறைந்தபட்ச சம்பளமானது வாழ்க்கையை நடத்தும் சம்பளம் இல்லை என்றும் அரசு இதனை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தக் குறைந்தபட்ச சம்பள உயர்வை பெரும்பாலான முதலாளிகள் விரும்பவில்லை என்றும் அதனை வழங்க முடியாது என்றும் கூறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசிய ஹோட்டல் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் லிப்ஸ் இன் கூறும்போது, தற்போது ஹோட்டலில் வேலை செய்யும் பணியாளர்களுக்குக் கூடுதல் சம்பளம் வழங்கப்படுவ தாகவும் அது தற்போது உள்ள குறைந்தபட்ச சம்பளத்தை விட அதிகம் என்றும் அவர் தெரிவித்தார். குறைந்தபட்ச சம்பளம் என்பது அடிப்படை சம்பளம் என்றும் அதில் மற்ற அலவன்சுகள் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஹோட்டல் தொழில் துறை ஈராண்டுகளாக முடங்கிக் கிடந்து தற்போது தான் மீண்டு வருவதாகவும், அடிப்படை சம்பளம் அதிகரித்துள்ளதால் அது நட்டத்திற்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் எச்சரித்தார்.
உள்ளூர் மற்றும் வெளியூர் அன்னிய தொழிலாளர்களுக்கும் சரிசமமான குறைந்தபட்ச சம்பளமானது, பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது என்றும் அது பொருளாதாரத்தை சிதைக்கும் என்றும் அவர் எச்சரித்தார். இந்தக் குறைந்தபட்ச சம்பளத்தின் மூலம் மில்லியன் கணக்கான அந்நியர்கள் இங்கு வேலை செய்வதால் அவர்களே பெரும்பாலும் பயனடைவார்கள்.
25 விழுக்காடு ஊதிய உயர்வு என்பது நாட்டுக்கு நல்லதல்ல. ஏனெனில், அந்நியர்கள் அதனை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தால், அது நமது பொருளாதாரத்திற்கு ஊக்கு விப்பாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். தொழில் துறைகளில் இருக்கும் மற்ற பிரச்சனைகளைத் தீர்க்காமல் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பது நன்மை பயக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
மலேசிய பட்ஜெட் ஹோட்டல் சங்கங்களின் துணைத் தலைவர் ஸ்ரீகணேஷ் அவரின் கூற்றை தாம் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.தற்போதுதான் தொழிலை தொடங்கி மீண்டு வரும்போது, திடீரென அரசு குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதாக அறிவித்தது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அது கூடுதல் சுமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பானது நடைமுறை செலவுகளை அதிகரிப்பதோடு சேவை கட்டணத்தையும் அதிகரிக்கும் மற்றும் பொருள் உற்பத்தியையும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பானது வேலையில்லா பிரச்சினையை மேலும் அதிகரிக்கச் செய்யும். ஏனெனில், சுமையைக் குறைக்க முதலாளிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கும் நடவடிக்கையை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
எனவே, குறைந்தபட்ச சம்பளத்தை ஏற்றுக்கொள்வதற்கு சிறிது காலம் ஆகும் என்றும் அது வரை அரசு தொழில் துறைக்கு எந்தவித நெருக்கடியையும் கொடுக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்