
ஜொகூர் சட்டமன்றம் எந்த நேரத்திலும் கலைக்கப்படும் நிலையில், அச்சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி அமோக வெற்றி பெறவேண்டும் என்ற உறுதிப்பாட்டில் மாநில அம்னோ, மசீச மற்றும் மஇகா சேர்ந்த வாக்காளர் பெருமக்கள் ஆர்வமாக உள்ளனர் என்று மஇகா இரண்டாம் நிலை உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா தமிழ் மலரிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் சூழ்நிலையை நாடு எதிர்நோக்கியுள்ளது. இம்முறை தேசிய முன்னணியே ஆட்சி அமைக்கும் அளவுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையான வெற்றியை பதிக்கும் என்பதில் ஐயமில்லை. ஒருவேளை பாஸ் தேசிய முன்னணியுடன் கூட்டு வைக்காமல் போனாலும் தேசிய முன்னணிக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தாது. அந்த நிலையில் பாரிசான் கூட்டணி தனித்தே போட்டியிடுவதில் அச்சம் கொள்ளவில்லை என்றார் முருகையா.மலாக்கா, சரவாக் இந்த இரண்டு மாநிலங்களில் தேசிய முன்னணி கூட்டணி அடைந்த மாபெரும் வெற்றியானது இன்றைய அரசியல் சூழ்நிலையை திருப்பிப் போட்டுள்ளது. அந்த நிலையில் ஜொகூர் மாநிலமும் பாரிசான் வசமாகும். அந்த மாநிலத்தில் போட்டியிடும் மஇகா வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி அடைவது உறுதி என்றும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளருமான முருகையா குறிப்பிட்டார்.அந்த வெற்றியின் வரிசையில், தெலுக் இந்தான் நாடாளுமன்றம் மஇகாவுக்கே என்பதை தேசிய முன்னணி தலைவர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கேமரன் மலை சீட்டிற்கு மாற்று இடமாக மஇகாவுக்கு தெலுக் இந்தானை கோடி காட்டப்பட்டுள்ளது. ஒரு வேளை பாஸ் நம்மோடு இணைந்தால் மஇகா அங்கம் வகிக்கும் பாரிசானுக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருக்கும் என்றும் முருகையா விவரித்தார்.