12 பேர் சொஸ்மாவில் கைது; பக்காத்தான் அரசாங்கம் தவறு செய்கிறது!

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட அந்த 12 பேர் மீதான குற்றத்தை முழு ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாத போலீஸ் தரப்பு, அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே சிறந்தது என பேரா உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராப்பாட் தெரிவித்தார். இலங்கையைப் பொறுத்த வரையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமாகக் கூறப்பட்டாலும், அங்கு நடந்த போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்களை தீவிரவாதிகள் என்று வகைப்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என அராப்பாட் கூறினார்.

தாம் பிகேஆர் கட்சியைப் பிரதிநிதித்து உலுகிந்தா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருந்தாலும், இந்த குற்றமற்ற மக்கள் சொஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறினார்.
எனவே மலேசிய அரசாங்கம் சொஸ்மா சட்டத்தை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருப்பதாக கூறிய அவர், இந்த சொஸ்மா சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சொஸ்மாவில் கைது செய்யப்பட்ட நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சென்று சந்தித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இவ்விவகாரத்தில் பக்காத்தான் அரசாங்கம் செய்வது தவறு என்பதை சுட்டிக்காட்டுவதற்கு தமக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + four =