12 ஆவது மலேசியத் திட்டம் மக்களவையில் தாக்கல் மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு வெ.40,000 கோடி

    பன்னிரண்டாவது மலேசியத் திட்டம் தொடர்பான செயல்வடிவ அறிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். நடப்பில் உள்ள திட்டங்களுக்காகவும் புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும் நாற்பதாயிரம் கோடி வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் என்றும் அவர் அறிவித்தார். கோவிட்-19 பெருந்தொற்றினால் விளைந்துள்ள சுகாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்ததால், மேம்பாட்டுத் திட்டங்கள் மீது முழுகவனம் செலுத்த முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டார். பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பொருட்டு தனியார்துறை முதலீட்டை ஆதரிப்பதற்காக நிர்வாகச் சுணக்கத்தை குறைப்பதற்கும் தரமான உள்கட்டமைப்பை ஏற்படுத்தித் தருவதற்கும் பொருளாதாரமுறையை வலிமைப்படுத்துவதற்கும் அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது என்று கூறினார். பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின்கீழ், உயர்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வியூகத் தொழில்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகியற்றின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்படும். கடுமையான வறுமைநிலையைத் துடைத்தொழிப்பதற்கும் வருமானத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுவொரு முழுமையான,விரிவான திட்டம் என்று வருணித்த அவர், ஒன்பது முக்கிய பகுதிகளை அது மையப்படுத்தியிருப்பதாகச் சொன்னார். இத்திட்டத்தின்கீழ் வரும் 2025ஆம் ஆண்டுக்குள் உயர்வருமானம் கொண்ட நாடாகவும் உயர் தொழில்நுட்பம் கொண்ட நாடாகவும் மலேசியா மேம்பாடு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரைக்குமான இந்த ஐந்தாண்டு மலேசியத் திட்டம், ஒரு வளமான, அரவணைப்புடைய, நீடித்து நிலைக்கக்கூடிய கெலுவார்கா மலேசியாவாக( மலேசியக் குடும்பம்) நாட்டை உருமாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பெரும் சவால்களை உலகம் எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளை மீண்டும் தொடங்குவதற்கும் அதற்கு உத்வேகத்தை ஏற்படுத்துவதற்கும் நாட்டின் வளப்பத்தை சமமாகப் பகிர்ந்து கொள்வதற்கும் சுற்றுச்சூழலைத் தொடர்ந்து பேணி வருவதற்கும் அது சரியான விவேகத்துடன் செயல்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    four × two =