ஹிண்ட்ராப் இயக்கத்தை ரத்து செய்யும் சங்கப் பதிவகம் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகிய தரப்பினரின் முடிவை எதிர்த்து அந்த இயக்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
பிரதமர்துறையில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்வாழ்வு அமைச்சராக முன்பு பதவி வகித்தவரான பி. வேதமூர்த்தி மூலம் அந்த வழக்கை ஹிண்ட்ராப் அந்த வழக்கைத் தொடுத்துள்ளது. அவ்வழக்கின் விண்ணப்பதாரர் வேதமூர்த்திதான் என்பது நீதிமன்ற ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது. சங்கப் பதிவகத்தின் தலைமை இயக்குநர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் அவ்வழக்கின் பிரதிவாதிகள் ஆவர். ஆயினும், நீதிமன்ற ஆவணங்களில் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பதாரரைப் பிரதிநிதிக்கும் அஸ்ரி, லீ சுவி செங் அண்ட் கம்பெனி எனும் சட்ட நிறுவனம், கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இம்மாதம் இருபத்திரண்டாம் தேதியன்று நீதிமன்ற சீராய்வுக்கு அனுமதி கோரும் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர். ஹிண்ட்ராப்பின் பதிவை ரத்து செய்வது தொடர்பான இரண்டு
முடிவுகளின் செல்லத்தக் கத்தன்மையை எதிர்த்து அந்த இயக்கம் வழக்குத் தொடுத்துள்ளது. அவற்றில் முதல் முடிவு, கடந்தாண்டு செப்டம்பர் முப்பதாம் தேதி அந்த இயக்கத்தை ரத்து செய்வதாக சங்கப்
பதிவகத்தின் தலைமை இயக்குநர் எடுத்த முடிவாகும். இரண்டாவது முடிவானது, அம்முடிவு நிலைநிறுத்தப்படுவதாக கடந்தாண்டு ஏழாம் தேதியன்று உள்துறை அமைச்சர் எடுத்த முடிவாகும். ஹிண்ட்ராப் இயக்கம் 1996ஆம் ஆண்டின் சங்கங்களின் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துள்ளதாக கூறி அந்த இயக்கத்தை ரத்துசெய்ய சங்கப் பதிவகத்தின் தலைமை இயக்குநர் கோரியிருக்கிறார் என்று ஹிண்ட்ராப் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு செப்டம்பர் 26 மற்றும் 30ஆம் தேதியன்று சங்கப் பதிவகத்தின் தலைமை இயக்குநருக்கு கடிதங்கள் வாயிலாக பதிலளித்தோம். –ஹிண்ட்ராப் இயக்கத்தின் பதிவை ரத்து செய்ய வேண்டாமென்று அக்கடிதங்கள்வழி கேட்டுக் கொண்டிருந்தோம்.
ஆயினும், ஹிண்ட்ராப்பின் பதிவை ரத்து செய்வதாக அதே ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதியன்று சங்கப் பதிவகத்தின் தலைமை இயக்குநர் கடிதம் மூலம் அறிவித்தார்.
அதன் பின்னர், சங்கப் பதிவகத்தின் தலைமை இயக்குநரின் முடிவை எதிர்த்து உள்துறை அமைச்சரிடம் கடந்தாண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று மேல்முறையீடு செய்தோம்.
ஆனால், மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் ஹிண்ட்ராப்பின் பதிவு ரத்து செய்யப்படும் முடிவு நிலை நிறுத்தப்படுவதாகவும்
இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் ஏழாம் தேதியன்று உள்துறை அமைச்சர் அறிவித்தார் என்று ஹிண்ட்ராப் தெரிவித்துள்ளது.