ஹராப்பான் பிரதமருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்! வோங் சென்: பிரதமர் பழியை ஏற்க வேண்டும்!

0

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் முடிவுகள் நம்பிக்கை கூட்டணியை தட்டி எழுப்பும் சம்பவம் என்று ஒத்துக்கொண்ட பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலி, பிரதமரின் தலைமைத்துவத்திற்கு முழு ஆதரவை வழங்குமாறு நம்பிக்கை கூட்டணி உறுப்புக் கட்சிகளின் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
ஆனால் பிகேஆர் உறுப்பினரும் கிளானா ஜெயா எம்.பியான வோங் சென் பிரதமர் முழுப் பழியையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் புதிய செயல்பாட்டுத் திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தஞ்சோங் பியாயில் நம்பிக்கை கூட்டணி அடைந்த தோல்வியை பற்றி அஸ்மின் தனது அறிக்கையில் மேலும் கூறுகையில், நம்பிக்கை கூட்டணி உறுப்பு கட்சிகளின் உறுப்பினர்களும் தலைவர்களும் ஒருவருக்கொருவர் குற்றஞ் சாட்டிக் கொண்டிருப்பதற்கு இது தருணமில்லை. நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நம்பிக்கை கூட்டணியின் மத்திய தலைமைத்துவத்தை எதிர்ப்பதற்கும் இது தருணமில்லை.
தலைமைத்துவத்தை தாக்குவதால் நம்பிக்கை கூட்டணி பலத்தை இழப்பதுடன் நாட்டையும் சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியாது.
அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து நம்பிக்கை கூட்டணியை பலப்படுத்தி எதிர்நோக்கும் சவால்களை சமாளிக்க வேண்டும் என்றார்.
பிரதமர் மகாதீருக்கு பிளவுபடாத விசுவாசத்தை நம்பிக்கை கூட்டணியின் உறுப்புக்கட்சிகளும் அவைகளின் உறுப்பினர்களும் தொடர்ந்து வழங்க வேண்டும். இதன் வழி பிரதமர் நாட்டையும் நம்பிக்கை கூட்டணியையும் சிறப்பான முறையில் வழி நடத்திச் செல்ல முடியும் என்று பொருளாதார விவகார அமைச்சருமான அஸ்மின் கூறினார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நம்பிக்கை கூட்டணி கடப்பாடு கொண்டிருப்பதை அக்கூட்டணி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களின் நம்பிக்கையை மறுபடியும் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அஸ்மின் வலியுறுத்தினார்.
இதற்கிடையே கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் மாற்றுக்கருத்துகளை தனது முகநூலில் நேற்று வெளியிட்டிருக்கிறார்.
தஞ்சோங் பியாயில் நம்பிக்கை கூட்டணி அடைந்த தோல்விக்கு மற்றவர்களின் மேல் அமைச்சர்கள், அரசாங்க ஊழியர்கள், அமைப்புகள் உட்பட, குற்றஞ்சாட்டிக் கொண்டும் பழி போட்டுக் கொண்டும் இருக்கலாம். ஆனால் நம்பிக்கை கூட்டணியின் தலைவர், அரசாங்கத்தின் தலைவர் என்ற அடிப்படையில் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முழு பழியை ஏற்க வேண்டும் என்று வோங் கூறினார்.பிரதமர் ஒரு புதிய செயற்பாட்டுத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அவர் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும். இல்லாவிடில் தோல்வி மேல் தோல்வியைத்தான் நம்பிக்கை கூட்டணி சந்திக்க வேண்டியிருக்கும் என்று வோங் கூறினார். நம்பிக்கை கூட்டணி ஆட்சியை கைப்பற்றி 18 மாதங்களாகியும் நாடாளுமன்றத்தில் இன்னும் முறையான சீர்திருத்தங்களை கொண்டுவரவில்லை.
பிரதமர் பதவியிலிருக்கும் நபருக்கும் அளவுக்கதிகமான அதிகாரம் குவிந்து கிடக்கிறது. அதைக் குறைப்பதற்கு நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் முயற்சியை மேற்கொள்ளவில்லை என்றார் வோங். மகாதீர் அன்வாரிடம் பிரதமர் பொறுப்பை ஒப்படைப்பதற்கு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயம் செய்யப்படாத நிலையில் வெளிநாட்டினர் முதலீடு செய்வதற்கு தயங்குகின்றனர் என்று வோங் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 13 =