ஸ்பானிஷ் புளூ உடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸ் ஒன்றும் இல்லை

0

அதென்ன ஸ்பானிஷ் புளூ? கேள்விப்பட்டதே இல்லையே என்று இதை வாசிக்கிற நீங்கள் புருவத்தை உயர்த்துவீர்கள்.

ஆமாம், பேர்டு புளூ என்னும் பறவைக்காய்ச்சலை பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்கிறோம்.

ஸ்வைன் புளூ என்று அழைக்கப்படுகிற பன்றிக்காய்ச்சல் பற்றியும் நமக்கு தெரியும்.

ஆனால் இன்புளூவென்சா தொற்று நோய் என்று அழைக்கப்படக்கூடிய ஸ்பானிஷ் புளூ காய்ச்சல் இப்போது ஏற்பட்டது அல்ல.

100 ஆண்டுகளுக்கு முன்னர் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்டு வந்த பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு பக்கமும், மைய நாடுகள் என அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் மற்றொரு பக்கமும் நின்று போரிட்ட முதல் உலகப்போர் நடந்த கால கட்டத்தில் தோன்றி பரவியதுதான் இந்த ஸ்பானிஷ் புளூ. இந்த ஸ்பானிஷ் புளூவுக்கு உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கையை கேட்டால் அதிர்ச்சியில் உறைந்து போவீர்கள். 5 கோடியில் இருந்து 10 கோடிவரையிலானவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.

நமது நாட்டில் 1 கோடி முதல் 2 கோடி வரையிலானவர்கள், இந்த ஸ்பானிஷ் புளூவுக்கு பலியாகி இருக்கிறார்கள். இன்று போல அன்று ஊடகங்களுக்கு சுதந்திரம் இருந்தது இல்லை. அதனால் பல நாட்டு அரசுகள் உலகப்போர் காலத்தில் மக்கள் மத்தியில் இந்த நோயை சொல்லி பதற்றத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக செய்திகளை வெளியிடாமல் பார்த்துக்கொண்டன. அதனால் பலி எண்ணிக்கையெல்லாம் உத்தேசமாக கூறப்பட்ட தகவல்கள்தான்.

இதில் பலியான ஒருவரை சொல்லுங்கள் என்றால், அவர் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தாத்தாவை சொல்லலாம்.

ஸ்பானிஷ் புளூ என்ற பெயரை வைத்து இது ஸ்பெயினில் தோன்றி பரவியது என்று முடிவு கட்டிவிடாதீர்கள்.

ஸ்பெயினில் இந்த நோய் தொற்றுவதற்குள், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஸ்பானிஷ் புளூ பரவி விட்டது. அதன்பின்னர்தான் ஸ்பெயினில் பரவி இருக்கிறது.

ஸ்பெயினில் பரவுவதற்குள் அந்த நாடுகளில் ஸ்பானிஷ் புளூ பரவியபோதும், அங்கெல்லாம் செய்திகள் வெளியே வராமல் பார்த்துக்கொண்டார்கள் என்பதால் வெளி உலகுக்கு அதுபற்றிய தகவல்கள் வராமல் போய் விட்டன. ஸ்பெயின் அரசு, உலகப்போரின்போது நடுநிலை வகித்ததால் இந்த நோய் பற்றிய தகவல்களை உள்ளபடியே ஊடகங்களில் வெளியிட்டு உலகத்துக்கு அம்பலப்படுத்தியது. அதனால்தான் இன்றளவும் அது ஸ்பானிஷ் புளூ என்று அழைக்கப்பட்டு வருகிறது. என்ன வேடிக்கை என்றால் ஸ்பானிஷ் புளூவை பிரேசில் நாட்டினர் அப்போது ஜெர்மன் புளூ என்று அழைத்திருக்கிறார்கள்.

ஆனால் இப்படி நோய்களுக்கு பெயரிடுவதில் ‘ஹூ’ என்றழைக்கப்படுகிற உலக சுகாதார நிறுவனம் விதிமுறைகளை உருவாக்கித்தந்துள்ளது. அதனால்தான் கொரோனா வைரஸ், சீன நாட்டில் தோன்றியதால் சீனா புளூ என்றோ, உகான் நகரில் தோன்றியதால் உகான் புளூ என்றோ அழைக்கப்படாமல், கொரோனா வைரஸ் நோய் என்று அழைக்கப்படுகிறது.

அதனால்தான் உலகத்தையே ஆட்டுவித்துக்கொண்டிருந்தாலும் சீனாவின் பெயரால் அழைக்கப்படாமல், அந்த நாட்டின் பெயர் சேதாரப்படாமல் கொரோனா வைரஸ் நோய் காப்பாற்றி இருக்கிறது.

ஸ்பானிஷ் புளூவால் எப்படி மரணங்கள் நேரிட்டன என்பதை உறைய வைக்கப்பட்ட உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட நுண்ணுயிரிகளை கொண்டு ஆராய்ச்சி நடத்தியதில் சைட்டோகைன் தாக்கம் என்ற பிரச்சினையால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றல் சிஸ்டம், அதீத எதிர்வினை புரிந்ததால் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை கண்டறிந்து இருக்கிறார்கள்.

அதனால் நல்ல நோய் எதிர்ப்புச்சக்தி கொண்ட இளைஞர்களை இந்த நோய் புரட்டிப்போட்டு கொன்று குவித்திருக்கிறது. அதே நேரத்தில் வயதானவர்கள், குழந்தைகள் பெரிய அளவில் அப்போது பாதிக்கப்படாமல் தப்பித்திருக்கிறார்கள். போர் வீரர்களை எல்லாம் இந்த ஸ்பானிஷ் புளூ நோய் கொன்று குவித்ததை வரலாற்றின் கருப்பு அத்தியாயங்கள் நமக்கு காட்டுகின்றன.

அந்தக் காலத்தில் ஸ்பானிஷ் புளூ குறித்த விழிப்புணர்வை அன்றைய அரசாங்கங்கள் செய்தாலும் அப்போது ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் மதத்தலைவர்களும், மத குருமார்களும்தான் செல்வாக்கு பெற்றிருந்தார்கள். அவர்கள் சொன்னதுதான் வேதம் என்று மக்கள் நம்பி செயல்பட்டார்கள். அது பாதிப்பையும் ஏற்படுத்தியது.

ஸ்பெயின் நாட்டின் ஜமோரா நகரில் நடந்த சம்பவம் இது. அங்கு, அரசு சுகாதார துறை அதிகாரிகளின் உத்தரவை கண்டுகொள்ளாமல், புனித ரெக்கோ என்ற புனிதரின் நினைவுச்சின்னங்களை வைத்து தினமும் மாலை நேரம் 9 நாட்களுக்கு தொடர் வழிபாடு நடத்துமாறு உள்ளூர் பிஷப் உத்தரவிட்டுள்ளார்.

அப்போது அந்த நினைவுச்சின்னங்களை கண்டு தரிசிக்க மக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்து நின்றிருக்கிறார்கள். அவற்றை முத்தமிட்டிருக்கிறார்கள். இதில் ஸ்பெயின் நாட்டிலேயே, ஏன் ஐரோப்பாவிலேயே ஸ்பானிஷ் புளூ தொற்றி, அதிக உயிர்களை பலி வாங்கியது இந்த ஜமோரா நகர்தான்.

சரி… நமது நாட்டில் அப்போது என்ன நடந்தது என்று அறிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறீர்கள்தானே?

மும்பை என்று இன்று நம்மால் அழைக்கப்படுகிற அந்த நாளின் பம்பாய் கப்பல் துறையில்தான் 1918-ம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்பானிஷ் புளூ வந்திறங்கி இருக்கிறது.

அந்தக் காலத்திலும் பம்பாயில் மக்கள் நிரம்பித்தான் வழிந்திருக்கிறார்கள். இன்றைய அளவுக்கு அன்றைக்கு பம்பாய் சுகாதாரமாக இருந்தது இல்லை. 1918-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி, 7 போலீஸ்காரர்களுக்குத்தான் ஸ்பானிஷ் புளூ காய்ச்சல் வந்திருக்கிறது. அதன்பின்னர் மின்னல் வேகத்தில் மற்றவர்களுக்கு, குறிப்பாக பம்பாய் துறைமுக பொறுப்பு கழகம், ஹாங்காங் அண்ட் ஷாங்காய் வங்கி, தந்தி அலுவலகம் (டெலகிராப் ஆபீஸ்) போன்றவற்றின் ஊழியர்கள், தொழிலாளர்களை தாக்கி இருக்கிறது.

காய்ச்சல், கை, கால் வலி, எலும்புகளில் வலி, சுவாச பிரச்சினை உள்ளிட்டவற்றால் முடக்கிப்போட்டிருக்கிறது.

வந்த சூட்டோடு சூடாக ஸ்பானிஷ் புளூ காய்ச்சலில் 7 பேர் பலியாகி இருக்கிறார்கள். ரெயில்கள் வழியாகவே இந்த வைரஸ் அந்த நாளில் பல நகரங்களுக்கு பயணித்திருக்கிறது. நல்ல வேளையாக அதில் கிராமப்புறங்கள் தப்பித்து இருக்கின்றன. அப்போது தலைவராக உருவாகி வந்த மகாத்மா காந்தியையும் இந்த ஸ்பானிஷ் புளூ படுக்க வைத்து விட்டதாம்.

பம்பாய் மாகாணத்தில் இருந்து பிற மாகாணங்களுக்கு பரவி இருக்கிறது. இதில் மொத்தம் 1 கோடியில் இருந்து 2½ கோடிப்பேர் பலியாகி இருக்கிறார்கள். 2012-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, இந்தியாவில் 1 கோடியே 40 லட்சம் பேர் இறந்ததாக சொல்கிறது.

கொரோனா வைரஸ்

எனவே ஸ்பானிஷ் புளூ காய்ச்சலுடன் ஒப்பிட்டால் இந்த கொரோனா வைரஸ் நோய் ஒன்றுமே இல்லை. தகுந்த முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டால், நாம் இந்த கொரோனா ஆபத்தில் இருந்து எளிதாக கடந்து வந்து விடலாம். பயப்படாதீர்கள். பதற்றப்படாதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 6 =