ஸ்காட்லாந்து அணியின் சீருடையை வடிவமைத்த 12 வயது சிறுமி

ஐ.சி.சி. 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 17 ஆம் தேதி தொடங்கி தற்போது ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. அதன்படி ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து அணி, வங்காளதேசம், பப்புவா நியூ கினியா மற்றும் ஓமன் ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் மோதிய ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது ஸ்காட்லாந்து அணி. இரண்டு ஆட்டங்களை விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி, மற்றொரு விஷயத்திலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அது அந்த அணி வீரர்கள் அணிந்திருக்கும் சீருடையாகும். அந்த சீருடையில் ஊதா மற்றும் கருப்பு நிற பட்டைகளைக் கொண்ட வடிவமைப்புடன், ஸ்காட்லாந்து நாட்டின் பெயர் முன்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும் அந்த சீருடையானது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த சீருடையை வடிவமைத்தர் குறித்த ருசிகர தகவலை ஸ்காட்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்காட்லாந்து கிரிக்கெட்டின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், அவர்களது சீருடையை வடிவமைத்தவர், ஹேடிங்டனைச் சேர்ந்த ரெபேக்கா டவுனி என்ற 12 வயது சிறுமி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீருடை வடிமைப்பு தொடர்பாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் போட்டி ஒன்றை நடத்தியது. சுமார் 200 பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்ட இந்த போட்டியில், ரெபேக்கா டவுனி வடிவமைத்த சீருடை, அணி நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டது. ஸ்காட்லாந்தின் தேசிய சின்னத்தில் உள்ள ‘திஸ்சில்’ எனப்படும் செடியின் நிறங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சீருடையை அவர் வடிவமைத்துள்ளார். அவரது வடிவமைப்பில் தயாரான முதல் சீருடை, அவருக்கே பரிசாகவும் வழங்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + one =