ஸெட்டி அக்தாரை கைது செய்க நஜிப் ஆதரவாளர்கள் அறைகூவல்

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வேண்டுமென்றே தொல்லைப்படுத்தப்படுவதாகக் கூறி அவரின் ஆதரவாளர்கள் நேற்று கண்டனக் கூட்டமொன்றை நடத்தினர். மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியாவின் முன்னாள் ஆளுநர் ஸெட்டி அக்தார் அஸிஸைக் கைது செய்யும்படியும் அவர்கள் வலியுறுத்தினர். நஜிப் ஒரு பலிகடாவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறார் என்றும் அவரின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றும்பெர்சத்துவான் சஹாபாட் உலுல் அம்ரி மலேசியா அமைப்பின் தலைவர் இம்ரான் சைட் அப்துல் அஸிஸ் நேற்றைய அக்கூட்டத்தில் தெரிவித்தார். நஜிப்பை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான முக்கிய ஆதாரங்களை மலேசிய லஞ்சஊழல் தடுப்பு ஆணையம் ( எம்ஏசிசி) தன்வசம் வைத்துள்ளது. ஆனால். சில முக்கிய புள்ளிகளைக் காப்பாற்றுவதற்காக அந்த ஆதாரங்களை வெளியிட அது மறுத்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். ‘ ஏம்பேங்க் ரிப்போர்ட்’ எனும் அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஸெட்டி அஸிஸ், அவரின் கணவர் தாவ்ஃபிக் அய்மான் போன்ற பெரும்புள்ளிகளைக் காப்பாற்றுவதற்காக எம்ஏசிசி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகிறது. அந்த ஆதாரங்கள் வெளிவந்தால் நஜிப்பை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்க முடியும் என்று கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தில் இம்ரான் தெரிவித்தார். அக்கூட்டத்தில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஸெட்டியைக் கைது செய்யும்படியும் நஜிப்பை வழக்கிலிருந்துது விடுவிக்கும்படியும் அவர்கள் முழக்க மிட்டனர். ஆர்ப்பாட்டக்கார்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நாற்காலிகளில் வரிசையாக அமர்ந்திருந்தனர். நன்கொடைகளைப் பெறுவதற்கு தமது தனிப்பட்ட பெயரில் வங்கிக் கணக்கைத் திறக்கும்படி நஜிப்புக்கு ஸெட்டிதான் ஆலோசனை கூறியிருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். ‘ ஏம்பேங்க் ரிப்போர்ட்’ அறிக்கையைத் தயாரித்தது எம்ஏசிசி ஆணையம்தான் என நம்பப்படுகிறது. நஜிப்பின் வங்கிக் கணக்கில் 260 கோடி வெள்ளி வரவு வைக்கப்பட்டிருப்பதும் அதற்கு ஒப்புதல் அளித்தது ஸெட்டிதான் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அப்பணம் சவூதி அரேபிய குடும்பத்தினர் அளித்த நன்கொடை என்று நஜிப் தெரிவித்திருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அவர் மீது வழக்குத் தொடர்வதற்கும் ஆதாரமாக அமைந்தது. கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரிக்கும் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் இடையில் தமது ஏம்பேங்க் வங்கிக் கணக்கில் அப்பணம் வரவு வைக்கப்பட்டிருந்தது. 1எம்டிபி நிறுவனத்திற்குச் சொந்தமான அப்பணத்தைக் கையாடியதாக நஜிப் மீது கள்ளப் பணப்பரிமாற்றக் குற்றங்களும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 3 =