ஸக்கீர் வழக்கின் எதிர்வாத அறிக்கையில் மாற்றம்; ராமசாமிக்கு அனுமதி

சர்ச்சைக்குரிய மத போதகர் ஸக்கீர் நாயக் தம்மீது தொடுத்துள்ள நிந்தனை வழக்கிற்கு எதிராகச் சார்வு செய்திருந்த எதிர்வாத அறிக்கையில் பேராசிரியர் பி.ராமசாமி மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இவ்வழக்கை செவிமடுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் ஃபிருஸ் ஜஃப்ரி அந்த மனுவை ஏற்றுக் கொண்டு, மாற்றத்தைச் செய்ய அனுமதியளித்தார். அதனையடுத்து இவ்வழக்கின் மேலாண்மை அக்டோபர் 13ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 2016லிருந்து 2019ஆம் ஆண்டு வரை பினாங்கு துணை முதல்வரான ராமசாமி தம்மீது களங்கம் கற்பிக்கும் வகையில் நிந்தனை அறிக்கைகளை சமூக ஊடகங்களில் ஒளியேற்றியிருப் பதாகக் கூறி, ஸக்கீர் 2019 அக்டோபர் 16ஆம் தேதி, ராமசாமி மீது வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
அவர் தமது மனுவில், 2016 ஏப்ரல் 19ஆம் தேதி ராமசாமி தம்மைத் தகாத வார்த்தைகளால் விமர்சித்து முகநூலில் செய்தி வெளியிட்டதாகவும், அதன் பின்னர், 2017 அக்டோபர் 1ஆம் தேதி எஃப் எம்டி இணைய இதழில் மற்றொரு நிந்தனையான அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் ஸக்கீர் குறிப்பிட்டிருந்தார்.
2019 ஆகஸ்டு 11ஆம் தேதி, தாம் கிளந்தான் அரசின் நிகழ்ச்சியில் பேசிய உரையை திரித்துக் கூறியதோடு அவ்வறிக்கையை அதே தினத்தன்று எஃப்எம்டி இணையதளத்தில் வெளியிடப் பட்டிருந்ததாக ஸக்கீர் சுட்டிக்காட்டி இருந்தார்.
அதே போன்று, 2019 ஆகஸ்டு 20ஆம் தேதி, மேலுமொரு நிந்தனை அறிக்கையை ராமசாமி வெளியிட்டதாகவும் அது இந்தியா டுடே எனும் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதாகவும் ஸக்கீர் குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கைகள் யாவும் தம்மை களங்கப்படுத்துவதாக தம்மை நாட்டின் அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் ஊறு விளைவிக்கும் நபராக விமர்சிப்பதாகவும் ஸக்கீர் குறிப்பிட்டு, அதற்குத் தகுந்த இழப்பீடு வழக்குவதோடு அம்மாதிரியான அறிக்கைகளை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
ராமசாமி தம்மை விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்படுத்திய விவகாரத்தில், ஸக்கீர் இன்னொரு வழக்கையும் ராமசாமி மீது 2019 டிசம்பர் மாதம் தாக்கல் செய்திருந்தார்.
மேற்கண்ட இரு வழக்குகளும் அடுத்தாண்டு மார்ச் 22ஆம் தேதி முதல், ஐந்து நாள்களுக்கு நடத்தப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + fifteen =