ஸக்கீரின் வசிப்பிட அந்தஸ்து ரத்தாகும்?

0

கோலாலம்பூர், ஆக. 17-
நாட்டின் நலனைப் பாதிக்கும் வகையில் ஸக்கீர் நாயக்கின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன என்பது உறுதியானால் அவருக்கான நிரந்தர வசிப்பிட அந்தஸ்து ரத்து செய்யப்படும் என பிரதமர் துன் மகாதீர் நேற்று கூறினார்.
எனினும் அவர் மீதான காவல் துறையின் விசாரணை முடிவுக்கு அரசாங்கம் காத்திருக்கும். இந்த நாட்டின் இனங்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் வகையில் அவரது கருத்துகள் உள்ளன என்பது உறுதியானால் அரசாங்கம் அவருக்கான அந்தஸ்தை ரத்து செய்யும்.
நாட்டின் நலனுக்கு எதிரான வகையில் அவரது நடவடிக்கை இருக்குமானால் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும். இனங்களுக்கு எதிரான மோதலை உருவாக்கும் உரைகளை அவர் நிகழ்த்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
அண்மையில் கிளந்தான் கோத்தாபாரு நகரில் ஸக்கீர் நாயக், இந்தியர்களையும் சீனர்களையும் அவமதித்துப் பேசிய சம்பவம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை விட மலேசியாவில் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் இந்தியர்களுக்கு 100 விழுக்காடு வசதிகளும் வாய்ப்புகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மலேசிய இந்தியர்கள் துன் மகாதீரை விட இந்தியப் பிரதமர் மோடிக்குத்தான் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று கூறி மலேசிய இந்தியர்களின் விசுவாசத்தை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே காவல்துறை ஸக்கீர் நாயக்கிடம் விசாரணை நடத்திவரும் வேளையில், அவரது நிரந்தர வசிப்பிடத்தை மறு ஆய்வு செய்து வருவதாக சிங்கப்பூர் என்எஸ்டி நாளிதழ் கூறியது.
ஸக்கீர் நாயக் மலேசியாவில் தொடர்ந்து இருக்க அனுமதிக்க முடியாது என்று அமைச்சரவை செய்த முடிவை பிரதமர் துன் மகாதீர் வெளியிடுவார் என்றும், ஆனால் அவர் வெளியேற்றப்படுவாரா என்பது பற்றிச் சொல்லப்படவில்லை என்றும் அப்பத்திரிகை கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here