ஷாபி மீதான கள்ளப்பணப் பரிமாற்ற வழக்கு; நான் புகார் கொடுத்ததால்தான் புலன் விசாரணை தொடங்கியது

வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு எதிராக தாம் கொடுத்த புகாரினால்தான் அவர் மீது புலன்விசாரணை தொடங்கியது என்று மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) அதிகாரி ஒருவர் நேற்று உயர்நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடமிருந்து 95 லட்சம் வெள்ளி பெற்றதன் தொடர்பில் அவரின் வழக்கறிஞரான ஷாபி மீது கள்ளப்பணப் பரிமாற்றக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவ்வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் ஜாமில் உசேன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
நஜிப்பிடமிருந்து ஷாபி 95 லட்சம் வெள்ளி பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராகப் புலன்விசாரணை தொடங்குவதற்கு ஏதுவாக கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் நான்காம் தேதியன்று தாம் எம்ஏசிசி ஆணையத்திடம் புகார் கொடுத்ததாக முகமட் ஃபாரிட் ஜபார் நேற்றைய தமது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
அதன் பிறகு, எம்ஏசிசி சட்டத்தின்கீழும் அம்லா எனப்படும் கள்ளப்பணப் பரிமாற்ற, பயங்கரவாத நிதியளிப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் வாயிலான பணவரவுத் தடைச் சட்டத்தின்கீழும் ஷாபி மீது விசாரணை நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதிக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதிக்கும் இடையில் 95 லட்சம் வெள்ளியை ஷாபி பெற்றிருந்தார். என்னுடைய விசாரணை அதனை மையப்படுத்திதான் அமைந்தது. அக்காலகட்டத்தில், பிரதமரின் அலுவலகத்தில் டத்தோஸ்ரீ நஜிப்பை இரண்டு தடவை ஷாபி சந்தித்துள்ளார்.
அப்போது 95 லட்சம் வெள்ளி மதிப்புடைய இரண்டு காசோலைகளை ஷாபியிடம் நஜிப் கொடுத்துள்ளார் என்று ஃபாரிட் கூறினார்.
அப்பணம் ஷாபியின் சட்ட நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் போடப்படவில்லை. மாறாக, அவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் போடப்பட்டிருந்தது. நாற்பத்தாறு தேர்தல் புகார் வழக்குகளில் தேசிய முன்னணியை பிரதிநிதித்து வழக்காடிய காரணத்தால்தான் அவருக்கு அப்பணம் வழங்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை அவ்வழக்குகள் நடைபெற்றன. யஷாபிக்கு வழங்கப்பட்ட அப்பணம் வரி விதிக்கப்பட வேண்டிய ஒரு வருமானம் ஆகும். ஆனால், அந்த வருமானத்தை வருமானவரித்துறையிடம் அவர் அறிவிக்கவில்லை என்று ஃபாரிட் கூறினார்.
கள்ளப்பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட் டதாகவும் தமக்கு கிடைக்கப்பெற்ற 95 லட்சம் வெள்ளியை வருமானத்துறையிடம் அறிவிக்காமல் மறைத்ததாகவும் ஷாபி மீது நான்கு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =