ஷாபி அப்டாலை பிரதமராக்குவது மகாதீரின் புனை கதை

சபா முதலமைச்சர் ஷாபி அப்டாலை நாட்டின் பிரதமராக அமானாவும் ஜசெகவும் பரிந்துரைத்துள்ளதாகத் துன் மகாதீர் கூறியிருப்பது அவரின் புனை கதை என்று பார்ட்டி பெசாக்கா பூமிபுத்ரா பெர்சத்துவின்(பிபிபி) உதவித் தலைவர் அப்துல் கரிம் ரஹ்மான் ஹம்சா குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் பிரதமராக யார் வரவேண்டுமென்று தீர்மானிக்க மகாதீருக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் அமானா, ஜசெக ஆகிய கட்சிகளை வம்புக்கு இழுத்து மகாதீர் வேடிக்கை பார்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
பிரதமரை மக்களே தீர்மானிப்பர். மகாதீர் தலைமையேற்கும் கட்சி அவரின் பரிந்துரையை முழுமனதோடு ஏற்றுக் கொண்டால் மட்டுமே, அவரின் பரிந்துரைக்கு வலுவிருக்கும். இல்லையானால், அரசியலில் குழப்பத்தை விளைவித்து மீன் பிடிக்கவே அவர் முயல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியைக் கைப்பற்றினால், ஷாபி அப்டாலை பிரதமராக்க அமானாவும் ஜசெகவும் பரிந்துரைத்து, தாம் அதனை ஏற்றுக் கொண்டதாக இரு நாள்களுக்கு முன்னர் துன் மகாதீர் கூறியிருந்தார்.
அரசியலில் மகாதீர் பல சித்து விளையாட்டுகளை விளையாடி அதிர்ச்சியை ஏற்படுத்துவதில் வல்லவர். இதனை அடுத்து அவர் மாட் சாபுவையும் லிம் குவான் எங்கையும் பிரதமராக்கலாம் என்ற பரிந்துரைகளையும் முன் வைப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவரின் பிதற்றலானது, அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி, இளைஞர்களுக்கு வழி விட வேண்டுமென்பதை வலியுறுத்துவதாகவும் அவரில்லாமலும் மலேசியா மேலும் வளர்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஷாபியை பிரதமராக்கும் பரிந்துரையை அமானா, ஜசெக ஆகியவை பரிந்துரைத்துள்ள தாகவும், அந்தப் பரிந்துரையானது அக்கட்சிகளிலும் பக்காத்தான் தலைமைத்துவ மன்றத்திலும் விவாதிக்கப்படவில்லை என்றும் மகாதீர் தெரிவித்திருந்தார்.
ஷாபி அப்டால் பிரதமராகவும், அன்வாரும் தமது புதல்வர் முக்ரிஸ் மகாதீரும் துணைப் பிரதமர்களாகவும் பரிந்துரைக்கப் பட்டிருப்பதாகவும் மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − five =