வெ.3,000 வரை சம்பளம் வழங்கக்கூடிய தோட்டத் துறையில் வேலை செய்ய உள்நாட்டவர்களுக்கு அழைப்பு

செம்பனை தொழில்துறை உட்பட மாதந்தோறும் சுமார் 3,000 வெள்ளி சம்பளமும் மற்ற சலுகைகளும் அளிக்கக்கூடிய தோட்டத் தொழில்துறையில் பொதுமக்கள் வேலை செய்ய முன்வர வேண்டும் என்று தோட்டத் தொழில்துறை மற்றும் மூலப்பொருள் அமைச்சர் கைருடின் அமான் ரஸாலி கேட்டுக் கொண்டார்.
தோட்டத் தொழில்துறையில் பல்வேறு வகையான வேலைகளுக்கு 30,000 இடங்கள் காலியாக உள்ளன என்று அவர் கூறினார்.
கோவிட்-19 தொற்றால் மலேசியர்கள் பலர் வேலையிழந்துள்ளதால், அந்நியத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்ப்பதற்கு இது அவசியமாகிறது என்றார் அவர்.
அந்நியத்தொழிலாளர்கள் மீதான விவகாரத்தைக் கவனிக்க அரசாங்கம் அமைச்சரவையின் சிறப்பு செயற்குழுவை அமைத்துள்ளது.
தோட்டத் தொழில்துறையில் அந்நியத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது என்ற புதிய கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார் கைருடின்.
அந்நியத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்த அனுமதிக்கா விட்டால் செம்பனைத் தொழில் துறை கடுமையாகப் பாதிப்படை யும் என்பதால், அந்நியத் தொழிலாளர்களை பணியில் அமர்த்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என்று மலேசிய தோட்ட உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருப்பதற்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தோட்டத் தொழில்துறை குறைந்தபட்சம் 70 விழுக்காடு அந்நியத் தொழிலாளர்களை நம்பியுள்ளது. இந்த அந்நியத் தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் வங்காள தேசம் மற்றும் இந்தியப் பிரஜைகள் ஆவர்.
தோட்டத் தொழில்துறையைச் சேர்ந்த அந்நியத் தொழிலாளர்களில் 2 முதல் 3 விழுக்காட்டினர் ஆண்டுதோறும் தாயகம் திரும்பிச் சென்று விடுவதால் இந்த தொழில்துறைக்கு அதிகபட்சமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால், இவ்வாண்டு இறுதி வரைக்கும் அனைத்துத் தொழில் துறைகளுக்கும் வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + three =