வெள்ளை மாளிகையில் 20 அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பதவி! புதியதோர் சரித்திரம் உதயம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முக்கிய நிர்வாக பணிக்குழுவில் 20 அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதில் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், மூத்த தூதரக அதிகாரியுமான உஸ்ரா ஜியா என்பவருக்கு வெளியுறவுத்துறையில் முக்கிய பதவியை ஜோ பைடன் வழங்கியுள்ளார். அமெரிக்காவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் தலைமையிலான அரசு நாளை 20ஆம் தேதி பதவியேற்கிறது. அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் மற்றும் முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவி ஏற்றவுடன் அவர்களது அரசின் நிர்வாகப் பணியை கவனிப்பதற்கான நபர்களை பணி அமர்த்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்த நிர்வாக பணிக்குழுவில் 13 பெண்கள் உட்பட சுமார் 20 அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், மூத்த தூதரக அதிகாரியுமான உஸ்ரா ஜியா என்ற பெண்ணுக்கு வெளியுறவுத்துறையில் முக்கிய பதவியை ஜோ பைடன் வழங்கியுள்ளார். சிவில் பாதுகாப்பு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான துணைச் செயலாளராக உஸ்ரா ஜியா நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற உஸ்ரா ஜியா 2014 முதல் 2017 வரை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துணை தலைவராக பணியாற்றி வந்தார். இதனிடையே, வெள்ளை மாளிகை மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநராக நீரா டாண்டன் மற்றும் அமெரிக்க சர்ஜன் ஜெனரலாக டாக்டர் விவேக மூர்த்தி பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நீதித்துறையின் அசோசியேட் அட்டர்னி ஜெனரலாக வனிதா குப்தா, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான துணை செயலராக உஸ்ரா ஜியா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கவுன்சிலிலும் அமெரிக்க வாழ் இந்தியரான பாரத் ராமமூர்த்தி இடம்பெற உள்ளார். அவர் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சுமார் 20 அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிர்வாக பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுகளை சேர்ந்தவர்களின் பங்களிப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − seven =