வெங்காயம் விலை உச்சத்தை தொட்டது – ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை

0

சென்னையில் வெங்காயம் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வெங்காயம் வருகிறது.

இது போதாது என்பதால் ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் லாரி லாரியாக வெங்காயம் வரவழைக்கப்படுகிறது.

மழையின் காரணமாக வட மாநிலங்களில் வெங்காயம் விளைச்சல் பாதியாக குறைந்து விட்டது. இதனால் கடந்த 4 மாதங்களில் வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த நவம்பர் முதல் வாரம் ஒரு கிலோ வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையானது.

நவம்பர் 2-வது வாரம் 10 ரூபாய் உயர்ந்து கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நவம்பர் கடைசியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தொட்டது. டிசம்பர் 2-ந்தேதி ரூ.110 ஆக உயர்ந்தது.

டிசம்பர் 4-ந்தேதி (நேற்று) ரூ.140 ஆக உயர்ந்தது. இன்று 10 ரூபாய் உயர்ந்து கிலோ ரூ.150-க்கு உயர்ந்தது. கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.150க்கு விற்கப்படும் வெங்காயம் அயனாவரம் கடைகளில் ரூ.160க்கு விற்கப்படுகிறது. சில கடைகளில் ரூ.170-க்கு விற்பனையாகிறது. சூப்பர் மார்க்கெட் கடைகளில் ரூ.180 வரை விற்கிறார்கள்.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயம் கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.160-க்கு விற்கப்படுகிறது. அயனாவரம் கடைகளில் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக கோயம்பேடு மார்கெட்டிற்கு 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் விற்பனைக்கு வந்த நிலையில் இன்று 28 லாரிகளில் வெங்காயம் வந்துள்ளது. இதன் காரணமாகவே வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வியாபாரம் சற்று மந்தமாகவே உள்ளது. பொதுமக்கள் வழக்கத்தை விட குறைந்த அளவே வெங்காயம் வாங்கி செல்கின்றனர். இந்த விலை உயர்வு மேலும் ஒரு மாதம் வரை நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயம் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மொத்த வியாபாரி கார்த்திக் கூறியதாவது:-

கோயம்பேடு சந்தைக்கு திருச்சி, சேலம், கோவை ஆகிய பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் தினசரி 8 முதல் 10 லாரிகள் வரை வருவது வழக்கம். ஆனால் கடந்த 2 மாதங்களாக மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விட்டது. கடந்த 3 நாட்களாக 4 டன் சின்ன வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

தற்போது விதைக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம் கடந்த 4 நாட்களாக பெய்த கன மழையால் முற்றிலும் சேதமடைந்து உள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மொத்த விற்பனையில் 1 கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ180க்கு விற்கப்படுகிறது. வரும் நாட்களில் விலை ரூ200-ஐ எட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முருங்கைக்காய் மொத்த விலையில் இன்று ரூ.260-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு முருங்கைக்காய் ரூ.30 வரை சில்லரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 10 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளது. அந்த வெங்காயம் வருகிற 15-ந்தேதி இந்தியா வந்தடையும்.

மேலும் வியாபாரிகள் வெங்காய பதுக்கலை தடுக்கும் வகையில் மொத்த வியாபாரிகள் 25 டன் வரையிலும் சில்லரை வியாபாரிகள் 5 டன் வரை மட்டுமே வைத்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்த கையிருப்பு அளவை குறைத்து நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமையலுக்கு தினந்தோறும் பயன்படும் வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here