விவசாயிகள் காய்கறிகளைப் பயிரிட்டு விற்கலாம்


காய்கறிகள் தட்டுப்பாடு இல்லாமல் அனைவருக்கும் கிடைக்க வழி பிறந்துள்ளது.கேமரன் மலை விவசாயிகள் காய்கறிகளைப் பயிரிட்டு, அவற்றை சந்தைகளுக்கு அனுப்பி விற்க அரசு அனுமதியளித்துள்ளதை அடுத்து, கேமரன் மலையிலிருந்து நகர்புறங்களுக்கு வரும் காய்கறிகளின் விலை கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
கேமரன் மலை மலாய் விவசாயிகளின் சங்கத் தலைவர் சைட் அப்துல் ரஹ்மான் சைட் அப்துல் ரஷிட் கூறும்போது, அதிகாரிகள் இந்த நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் செய்யப் போவதில்லை என்று தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.இந்நிலையில் கேமரன் மலையில், கம்போங் ராஜா, கம்போங் புளூ வேலி, லோஜிங் போன்ற பகுதிகளில் காய்கறிகள் அதிகமாகப் பயிரிடப்பட்டு நாட்டின் மற்றப் பகுதிகளுக்கு அனுபப்பப்டுகின்றன.
கேமரன் மலை விவசாயிகள் விவசாயப் பொருள்களைப் பயிரிட்டு அனுப்ப ஆவலோடு எதிர்பார்த்து வந்ததாக கேமரன் மலை விவசாய தொழில்துறைக் கழகத்தின் தலைவர் டான் வேய் வுன் தெரிவித்தார்.
அப்பகுதியில் ஜூன் 1லிருந்து விதிக்கப்பட்ட வலுவாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு விவசாயிகளின் வருமானத்தைப் பெரிதும் பாதித்துள்ளது.
விவசாயிகள் ஒவ்வொரு நாளும் விளையும் 560 டன் காய்கறிகளில் 40 விழுக்காட்டை அனுப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக பல இடங்களில் காய்கறிகளின் விலை 10 மடங்கு அளவுக்கு உயர்ந்து மக்களின் கோபத்துக்கு உள்ளானது.
இந்த முடிவானது விவசாய அமைச்சு, போலீஸ் துறை, தேசிய பாதுகாப்பு மன்றம், சுகாதார அமைச்சு ஆகியவற்றின் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.
எனினும், விவசாயம், உணவு தொழிலியல் அமைச்சர் ரோனால்ட் கியான்டி, விவசாயிகள் விவசாயப் பொருள்களை அறுவடை செய்து விநியோகிக்கலாம் என்று அறிவித்திருந்தார்.அரசின் அனுமதி விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருப்பதாகவும், அதில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என்று தாங்கள் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
புதிய வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளின் படி விவசாயிகள் விவசாயப் பொருள்களை லோரிகளில் ஏற்றவும் இறக்கவும் அனுமதிக்கப்படுவர்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைத்தவுடன் விவசாயிகள் தங்களது தொழில்களைத் தொடங்கி, விளைப் பொருள்களை சந்தைகளுக்கு அனுப்பத் தொடங்குவர் என்று அவர் தெரிவித்தார்.இஎம்சிஓவினால் கேமரன் மலையில் உள்ள 500 விவசாயிகளும் பூக்களைப் பயிரிடும் 80 பேரும் பாதிக்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்போங் ராஜா, கம்போங் புளூ வேலி ஆகிய பகுதிகளில் 180 மெட்ரிக் டன் அல்லது 32 விழுக்காடும், லோஜிங் பகுதியில் 380 மெட்ரிக் டன் அல்லது 68 விழுக்காடு காய்கறிகளும் உற்பத்தியாகின்றன.
பூ பயிரிடும் விவசாயிகள் குறைந்தது 500 மில்லியன் ரிங்கிட் இழப்பை எதிர்நோக்கியதாக டான் தெரிவித்தார்.
தொழிற்சாலைகளைப் போலல்லாமல் இங்கு விவசாயப் பொருள்கள் உற்பத்தியாவதால், அவை ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை.
இங்குள்ள விவசாயிகள் காய்கறிகளை மட்டுமே நம்பியிருப்பதால், அரசின் எஸ் ஓபிக்கள் இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.காய்கறிகள் தொடர்ந்து விளைந்து கொண்டே இருக்கும். அதனை ஒவ்வொரு நாளும் அறுவடை செய்ய வேண்டும். பின்னர் அவற்றைச் சந்தைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அது முடியவில்லை என்றால், அவற்றை அழிப்பதை விட வேறு வழியில்லை.
எஸ்ஓபியில் தளர்வு கொடுக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைவதோடு தொழிலில் மும்முரமாக ஈடுபட முடியும் என்று டான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =