விற்பனையின்றி கேமரன் மலையில் பூக்களை வீசும் அவலம் தொடர்கிறது


பூக்களை விதைத்து, மலர் மணங்களை வீசிய, கேமரன் மலை பூந்தோட்டக்காரர்கள் வாடிய தங்களின் பயிர்களின் நிலைமையைக் காண முடியாமல், மீண்டும் மீண்டும் அரசாங்கத்திடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
பூத்து குலுங்கும் பூக்கள், விற்பனைக்கு செல்லாமல் போவதால், தோட்டத்து உரிமையாளர்களும், அதனை நம்பி இருக்கும் வியாபாரிகளும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக, கேமரன் மலையில் கடந்த பல ஆண்டுகளாக பூ விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சிலர் கூறினர்.
“மண்ணில் வியர்வை சிந்தி விதைத்த பயிர்கள், இன்று பூக்காளாகி வாடி நிற்கும் தருணங்களில், வியாபாரிகளின் உழைப்பு வீணாகிப் போவது வருத்ததை ஏற்படுத்துகிறது. அறுவடை செய்து அனுப்ப வேண்டிய பூக்கள் இன்னும் பூவை அறுவடை செய்து அனுப்ப முடியாத நிலை. அனைத்தையும் வெட்டி வீசி எறிய வேண்டி இருக்கிறது. இதனால் கேமரன் மலை விவசாயிகளுக்கு முக்கியமா இந்திய விவசாயிகளுக்கு பெரும் இழப்பாக இருக்கிறது’’ என்று கேமரன் மலை இந்திய விவசாயிகள் சங்கச் செயலாளர் பிரவின் குமார் மோகன் தெரிவித்தார்.
செயல்பாட்டு தர விதிமுறை எஸ்.ஓ.பி.யைப் பின்பற்றி தங்களின் வியாபாரங்களைத் தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே தங்களின் ஒரே கோரிக்கையாக உள்ளதாக கேமரன் மலை இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் மதன் சுப்பிரமணியம் கூறுகின்றார்.
“இங்கு இந்தியர்கள்தான் பூக்களை பெரிய அளவில் அறுவடை செய்து வருகிறோம். எனவே, எஸ்.ஓ.பி.யை பின்பற்றி பூக்கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம். இதன்வழி எங்களின் நஷ்டத்தை சற்று ஈடுகட்ட முடியும்‘’ என்று கேமரன் மலை இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் மதன் சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
இழப்பை எதிர்நோக்கும் வியாபாரிகளின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் உரிய உதவிகள் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 4 =