விமானப் படைக்குப் புதிய விமானங்களே நல்லது

வசதி குறைந்தவர்கள் புதிய காரை விட பயன்படுத்தப்பட்ட கார்களையே விரும்பி வாங்குவது வாடிக்கையான ஒன்று. விமானப்படைக்கு விமானங் களை வாங்கும்போது, பழைய விமானங்களை வாங்குவதை விட புதிய விமானங்களை வாங் குவதே சிறப்பாக இருக்கும் என்று அத்துறை சார்ந்த நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். பழைய விமானங்கள் காலம் செல்லச் செல்ல வானில் பறப்பதற்கு சிக்கல் ஏற்படும் என்றும் அடிக்கடி பழுது ஏற்பட்டு பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்றதாக இருக்காது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர் எனவே, விமானப்படைக்கு விமானங்களை கொள்முதல் செய்யும் போது அரசு இதில் கவனத்தைச் செலுத்தி புதிய விமானங்களை வாங்குவதே நல்லது என்று விமான விபத்து விசாரணை அதிகாரியான கேப்டன் முகமது அபுபக்கர் தெரிவித்தார். வர்த்தக ரீதியான விமானங்கள் இராணுவ விமானங்கள் யாவும் விபத்தில் சிக்குவதற்கு சீதோஷ்ணம், விமானத்தின் பாதுகாப்பு, விமானியின் நடவடிக்கை போன்றவையே முக்கிய காரணங்களாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். விமானத்தின் இயந்திரக் கோளாறு அல்லது உதிரிப் பாகங்களின் பழுது போன்ற காரணங்களால் விபத்துகள் ஏற்படுவதாகவும், ஹெலிகாப்டர்களின் விபத்துகள் பெரும்பாலும் சீதோஷ்ணத்தின் காரணமாகவும் ஏற்படுவதாக அபு பக்கார் தெரிவித்தார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பட்டவர்வொர்த் விமானத் தளத்தின் மீது பறந்து கொண்டிருந்த மலேசிய விமானப் படையின் 108 ரக விமானம் விபத்துக்குள்ளாகி அதன் விமானி உயிரிழந்ததோடு மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளாவது மலேசியாவில் வாடிக்கையாக நடக்கும் ஒன்று. 1996 ஆம்ஆண்டில் இருந்து விமானங்கள் விபத்துக்குள்ளாவது இது 9ஆவது முறை என்றும் சொல்லப்படுகிறது. நாட்டில் ஹோக் விமானத்தைத் தவிர மற்றவித விமானங்களான ஸ்கைஹோக், தெபுவான் ஆகிய விமானங்களும் விபத்துக்குள்ளாகி உள்ளன. 1950லிருந்து 1970ஆம் ஆண்டு வரை கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளோடு நமது ராணுவம் போரிட்ட பின்னர், வேறெந்த போரையும் சந்திக்காததால், பல ராணுவ விமானங்கள் பயன்பாட்டிலிருந்து முடக்கப்பட்டன. ராணுவ விமானம் அல்லது வர்த்தக ரீதியான விமானங்களின் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் என்று அவர் தெரிவித்தார். நமது நாட்டில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட பழைய ஸ்கைஹோக் விமானங்களே கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ரக விமானங்கள் நவீன தொழில்நுட்பம் குன்றியதாக இருக்கின்றன. அவை கொரியாவில் நடந்த போரில் பயன்படுத்தப் பட்டவையாகும். கொரிய போர் 1953இல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த விமானங்களின் இயந்திரத்தை மாற்றினால் அது இன்னும் 10லிருந்து 15 ஆண்டுகள் மட்டுமே தாக்குப் பிடிக்கும். அதற்குப் பின்னர் இயந்திர பாகங்களின் தேய்மானம், பழுது போன்றவை ஏற்பட பெரும் வாய்ப்பு உள்ளது. விமான இயந்திர பாகங்கள் எளிதில் பழுதுபட வாய்ப்பு அதிகமாக இருப்பதால் , பழைய, பயன்படுத்தப்பட்ட விமானங்களை வாங்குவதில் அரசு விழிப்பாக இருக்க வேண்டுமென காமில் கேட்டுக் கொண்டார். இதனிடையே விமானத் துறையின் நிபுணரான ஜுஸ்வில் அட்ரியானி சைபுல் அன்வார் கூறும்போது, பழைய விமானங்களை முறையாகப் பழுது பார்த்தால், அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும் என்று குறிப்பிட்டார். காலம் செல்லச் செல்ல விமானப் பாகங்களில் பழுது ஏற்படுவது இயல்பு. எனினும் இயந்திரங்களை முழுமையாகப் பழுது பார்த்தால், அவை நல்ல முறையில் பயன்படுத்தத் தகுதி பெற்றிருக்கும். அவர் மேலும் கூறும் போது, நவீன தொழில்நுட்பம் நாளுக்கு நாள்மாறி வருவதால், அதற்கேற்றவாறு நாமும் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் கொண்ட புதிய விமானங்களைக் கொள்முதல் செய்ய வேண்டுமென ஜுஸ்வில் அட்ரியானி கேட்டுக் கொண்டார். அது மற்ற நாடுகளுக்கு ஒப்ப நவீன விமானங்களை நாம் கொண்டிருக்க அது உதவும் என்று அவர் தெரிவித்தார். விமான கொள்முதலில் தாம் கலந்து வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, பழுது பார்க்கப்பட்ட பழைய விமானங்களையே நமது தலைவர்கள் வாங்க விருப்பம் தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார். அண்மைய காலங்களில் மலேசிய வான்வெளியில் அந்நிய விமானங்கள் ஊடுருவுவது வழக்கமாக நடைபெற்று வருவது கவலை அளிப்பதாகவும் அதனை எதிர்கொள்ள நவீன தொழில்நுட்பம் கொண்ட விமானங்கள் நமக்கு அத்தியாவசியமாகத் தேவை. நாட்டில் நிதி பற்றாக்குறையால் புதிய விமானங்களைக் கொள்முதல் செய்ய முடியாது என்றால், விமானங்களை குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகை எடுத்துப் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =