விட்ட இடத்திலிருந்து மீண்டும்……?

பல ஆண்டுகளாக நாம் எட்டியிருந்த வெற்றிகளைத் தற்போது இழந்து வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மத்திய தர குடும்பங்கள் தற்போது கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு மிகவும் வறுமையான சூழ்நிலையில் வாழ்க்கையை நடத்தி வருகின்றன. உலகளாவிய நிலையில் வியாபித்திருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றே இதற்கு காரணமாகும். தொற்று எல்லோரையும் ஆட்டிப் படைத்திருக்கிறது. எல்லோரையும் மன குழப்பத்தில் ஆழ்த்தி வாழ்க்கையைச் சூன்யமாக்கி உள்ளது என்பதே உண்மையாகும். அது பற்றிக் குறிப்பிட்ட துன் அப்துல் ரசாக் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் டாக்டர் பார்ஜொயாய் பார்டாய், ஒட்டுமொத்தமாக எல்லோரது வருமானமும் 10.7 விழுக்காடு குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். இக்காலகட்டத்தில் அதிகமான பாதிப்புக்குள்ளாகியோர் பி40, எம்40 பிரிவு மக்களே ஆகும். ஆயினும் டி20 பிரிவு மக்கள் பலரும் இந்தப் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இந்த 3 பிரிவினரும் ஒட்டுமொத்த வருமானத்தில் 50 விழுக்காட்டை இழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, இந்தப் பிரிவு மக்களின் வருமானம் சராசரியா மாதமொன்றுக்கு ரிம. 2,000க்கும் குறைந்துள்ளது. அப்பிரிவினர் இதுவரை சேமித்துள்ள பணத்திலிருந்து எல்லாவற்றையும் இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் மிகவும் வசதி குறைந்த குடும்பத்தில் மாத வருமானம் ரிம. 2,000க்கும் கீழாகக் குறைந்துள்ளதாகவும் அவர் கணிக்கிறார். அண்மையில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறும்போது, எம்40 பிரிவில் இருந்த 580,000 குடும்பங்கள் தற்போது பி40 பிரிவுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக அவர்கள் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தாகவும் அவர்களின் வறுமைக் கோடு 5.6 விழுக்காட்டிலிருந்து 8.4 விழுக்காடாக அதிகரித்துள்ளதாகக் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையானது இதற்குமுன் எம் 40 பிரிவின் 580,000 குடும்பங்களின் வருமானம் ரிம. 14,800 ஐம்பதிலிருந்து ரிம. 10,959 ஆகக் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், இவ்வாண்டு தொடக்கத்தில் எண்ணெய் விலை ஏற்றம் கண்டிருப்பதால் மக்களின் வருமானமும் குறைந்துள்ளதோடு அவர்கள் ஒருவிதமான பணவீக்கத்தையும் சந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டார். தற்போது, தொழில்துறைக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆயினும், பழைய பாணியிலான தொழில்துறைகளை நாம் கைவிட்டு புது மாதிரியான நவீன தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதுபற்றி கருத்துரைத்த சமூக ஆர்வலர் ரேமன் நவரத்தினம், இந்த நிலையானது அரசின் புதிய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் எழுந்ததாகக் குற்றம் சாட்டினார். இது ஒரு குறிப்பிட்ட சாராருக்கு உதவி செய்ய வேண்டும் என்று உருவாக்கப்பட்ட வேளையில், இன்னும் பல பிரிவு மக்களைக் கைவிட்டு விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் பல குடும்பங்கள் மூன்று வேளை உணவுக்காக ஏங்கித் தவிப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். இந்தச் சமயத்தில் பி40 பிரிவினர் உடனடியாக வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டும். தவறினால், அவர்கள் வாழ்க்iயை நடத்த இன்னும் சிரமப்பட வேண்டி வரும். தற்போது ஒரு அவசரகாலத்தை நாம் அனுபவித்து வருகிறோம். எனவே, வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கித் தர வேண்டும். அது அரசின் கடமையாகும். அதுவும் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டியது மிகவும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். அது இனவாரியாகப் பார்க்காமல், அனைவருக்கும் உதவி செய்வதாக அமைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தற்போதைய இனப் பாகுபாட்டை ஒதுக்கி வைத்துவிட்டு அனைத்து சமூகமும், மனிதர்களும் எல்லா உரிமையும் பெறத் தகுதி பெற்றிருப்பதை மறந்து விடக் கூடாது. அதற்கேற்ற வகையில் திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று ரேமன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =