விடுதலைப் புலி அனுதாபிகள் அறுவரின் வழக்கு உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி அளித்த சந்தேகத்தின் பேரில் சொஸ்மா சட்டத்தில் கைது செய்யப்பட்ட அறுவரின் வழக்குகள் செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.அரசுத் தரப்பு கேட்டுக் கொண்டதற்கிணங்க நீதிபதி அஸுரா அல்வி அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மேலும், அந்த அறுவரும் தங்களின் ஜாமீனுக்காக உயர்நீதிமன்றத்தில் மனு செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த அறுவர் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் ராம்கர்ப்பால் சிங், ஆர்.டி.ராஜசேகரன், ஷாஃபிக்கா சோஃபியான் மற்றும் மெத்தியூஸ் ஜூட் ஆகியோர் எதிர்ப்பு எதனையும் தெரிவிக்கவில்லை.
மலாக்கா மாநில அரசு சார்பு நிறுவன செயல்முறை அதிகாரி எஸ்.சந்துரு(வயது 38), பொறியியல் உதவியாளர் எஸ்.அரவிந்தன்(வயது 27), கிடங்கு அதிகாரி எஸ்.தங்கராஜ்(வயது 26), பாதுகாவலர் எம்.பூமுகன்(வயது 29), பள்ளி ஆசிரியர் சுந்தரம் ரெங்கன் எனும் ரெங்கசாமி(வயது 52) ஆகியோர் கடந்த அக்டோபர் 31இல் அஸுராவின் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி அளிக்க முறையே, தமிழரசன் சிவம், அரவிந்தன் சுப்ரமணியம், பூமுகன் தமிழன், சந்துரு சுப்ரமணியம் மற்றும் எழிலன் எழிலன் எனும் பெயரில் வங்கிக் கணக்குகளை வைத்திருந்ததாகப் குற்றம் சாட்டப்பட்டனர்.
ஆறாவது சந்தேக நபரான டாக்சி ஓட்டுநர் வி.பாலமுருகன் (வயது 37) என்பவர் அதே போன்ற குற்றச்சாட்டில் அக்டோபர் 31ஆம் தேதி நீதிபதி அஸுராவின் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டார்.
இவர்களைத் தவிர்த்து, மலாக்கா காடெக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் உட்பட அறுவர் பல்வேறு மாநிலங்களில் அதே போன்ற குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் அனைவரும் சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 29ஆம் தேதி, சொஸ்மாவில் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் கோரிக்கையை உயர்நீதிமன்றங்கள் பரிசீலனை செய்ய முடியும் என உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கஸாலி உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
மலேசியாவில் விடுதலைப் புலிகளின் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு 2014ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. ஸ்ரீலங்கா, அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் விடுதலைப் புலி இயக்கத்திற்குத் தடை விதித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − fourteen =