விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்குகள் மீண்டும் உயிர் பெறலாம்

அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 12 பேர் விடுவிக்கப்பட்டதை அடுத்து, அவர்களின் சொஸ்மா வழக்குகளை மீண்டும் விசாரிக்க வாய்ப்பு இருப்பதாக புதிய உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்தார். அது சம்பந்தமாக அமைச்சின் அதிகாரிகளுடனும் போலீசாருடனும் கலந்து பேசி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது தீர்மானிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். தீவிரவாதமும் பயங்கரவாதமும் உலகளவில் மருட்டலை உருவாக்கியிருப்பதால், அதனை ஒடுக்க வேண்டியது நமது கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளின் பொருள்களையும் புகைப்படங்களையும் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில், ஜசெகவின் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் சொஸ்மா சட்டத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடாமல் 3 மாதங்களுக்கு மேல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். எனினும், அப்போதைய சட்டத் துறைத் தலைவரான டோமி தோமஸ் அவர்களைக் கைது செய்து குற்றம் சாட்ட போதுமான ஆதாரம் இல்லையென்று கூறி அவர்களை விடுவித்தார். அச்சமயத்தில் உள்துறை அமைச்சின் முடிவுகளில் தலையிட டோமி தோமஸுக்கு உரிமையில்லை என அதன் அமைச்சர் முஹிடின் யாசின் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − five =