விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர்… நன்றி தெரிவித்த நாசா…

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது. லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இஸ்ரோவின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதனால் 14 நாட்களுக்கு பிறகு லேண்டரை உயிர்ப்பிக்கும் முயற்சியை இஸ்ரோ கைவிட்டது. 
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். 
இந்நிலையில் அமெரிக்காவின் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் விக்ரம் லேண்டர் விழுந்த இடம் கண்டறியப்பட்டுள்ளது. 
நாசா செயற்கைக்கோள் நிலவின் தென்துருவ பகுதியை துல்லியமாக எடுத்த புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டன. இதில், செப்டம்பர் 17, அக்டோபர் 14, 15 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாட்களில் வெளியிட்ட புகைப்படங்களை ஆய்வு செய்த தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன், விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடத்தை கண்டுபிடித்து நாசாவுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். அவரது ஆய்வை நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
சண்முக சுப்பிரமணியன் கொடுத்த தகவலின் அடிப்படையில்,  நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த புகைப்படத்தில் உள்ள பச்சை நிறப் புள்ளிகள் லேண்டரின் சிதைவுகளை குறிப்பதாகவும், நீல நிற புள்ளிகள் லேண்டரின் பாகங்கள் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளத்தை குறிப்பதாகவும் நாசா கூறி உள்ளது.
சண்முக சுப்பிரமணியன், சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here