விக்னேஸ்வரன் எது உண்மை என்பதை அறிந்து பேசவேண்டும்

0
P

நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நஜிப் மற்றும் இஸ்லாம் அல்லாதாரை ஏற்றுக்கொள்ள முடியாத பாஸ் கட்சியின் பொதுச் செயலாளருடன் எதிர்க்கட்சி மஇகா தலைவர் திறந்த இல்ல உபசரிப்பினை நடத்துவதற்கு பக்காத்தான் அரசு தடையாக இல்லை. இந்நிலையில் புதிய அரசாங்கம் தேசிய அளவில், தீபாவளி திறந்த இல்ல விருந்து உபசரிப்பினை நடத்தாதது இந்திய சமூகத்திற்கு அவமானம் என்று அந்நிகழ்ச்சியில் பட்டாசு கொளுத்திப் போட்ட விக்னேஸ்வரனை சாடினார் பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன். ஓர் எதிர்க்கட்சிக்கு தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ எஸ்.விக்னேஸ்வரன் உண்மையை அறிந்து எதைப் பேசவேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
பேரா இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வழங்கப்பட்ட 2,000 ஏக்கர் கல்வித் தோட்டத்தின் விவரங்களைக் குறித்து இந்திய சமுதாயம், மாணவர்கள், சமூகப் பற்றாளர்கள் எழுப்பி வரும் கேள்விகளுக்கு பதில் கூறாமல், உண்மையைப் பூசி மெழுகுவதே இந்த சமூகம் எதிர்நோக்கும் மிகப் பெரிய அவமானமாகும்.
இதையடுத்து மைக்கா ஹோல்டிங்ஸ் நிதி நிறுவனத்தில் பங்கு பணம் போடுங்கள். உங்களுக்கு இரண்டு மடங்காக கிடைக்கும் என கூவி அழைத்தனர். அவர்களின் ஆசைக்கு மயங்கிய அந்த அப்பாவி மக்கள் போட்ட பணத்தை திரும்ப கேட்டபோது கூட்டரசு சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு மைக்கா ஹோல்டிங்ஸ் மாநாட்டில், அவர்களை கண்மூடித்தனமாக அடித்து உதைத்தது மற்றோர் அவமானமாகும்.
கடந்த 13.5.1992இல் நடந்த கூட்டமொன்றில், டெலிகோம்ஸ் பங்குப் பணம் கடத்தப்பட்ட உண்மை அறிந்து கேள்வி கேட்கச் சென்ற பங்குதாரர்கள் வன்முறைக்கு ஆளாகினர் என்பது அவமானம்.
25 ஆண்டுகள் சென்ற நிலையில், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, டான்ஸ்ரீ ஞானலிங்கத்திடம் அவசர அவசரமாக 1 வெள்ளி பங்கினை 80 காசுக்கு ஈடு செய்யமுடியாத நட்டத்திற்கு விற்று சமூகத்தை ஏமாற்றினார்களே இதுவும் அவமானம்.
ஏய்ம்ஸ்ட் மருத்துவப் பல்கலைக்கழகம், மஇகா உறுப்பினர்களின் தீவிர ஆதரவினால் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று நடந்ததென்ன? மஇகாவுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதாகவும். இந்த அவமானத்தை மஇகா எவ்வாறு களையப் போகிறது.
இதுபோன்ற அவமானத்தை நம் சமுதாயத்தினர் புதிய அரசாங்கத்திடம் சந்தித்ததே இல்லை. சமுதாயத்தையும் அவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் காப்பதற்கு நிகழ்ச்சி நடத்தி அதன் மூலமாக நிதி திரட்டியதில்லை என்றும் சிவநேசன் குறிப்பிட்டார்.
தேசிய நிலையில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி வரும் 16.11.2019இல் ஈப்போ நகராண்மைக் கழக திடலில் பெரிய அளவில் நடைபெறவுள்ளதாகவும் இது கடந்த ஆண்டே முடிவு செய்யப்பட்ட ஒன்று எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து கேள்வி கேட்பதற்கு விக்னேஸ்வரன் தகுதி இழந்தவர் என்று நேற்று முன்தினம் ஒற்றுமைத்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில், தாப்பா நகரில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வுக்குப் பின்பு சிவநேசன் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − seven =