வாழ்வை உயர்த்தும் பவுர்ணமி கிரிவலம்

கிரிவலம் என்றதுமே நம் எல்லாருக்கும் திருவண்ணாமலை கிரிவலம் தான் நினைவுக்கு வரும். திருவதிகை தலத்திலும் பவுர்ணமி தோறும் விடிய, விடிய கிரிவலம் நடைபெறுகிறது.

இங்கு தான் கிரி(மலை) இல்லையே… எப்படி கிரிவலம் என்பது இத்தலத்துக்கு பொருந்தும் என்று நீங்கள் நினைக்கலாம். இதுபற்றி சீனிவாச குருக்களிடம் கேட்டபோது, இந்த தலமானது ஈசன் வீற்றிருக்கும் கயிலாயமலைக்கு இணையானது. கலிலாயமலை போன்றே புண்ணியங்கள் தர வல்லது. அதனால் தான் கயிலாயத்தையே சுற்றுவதற்கு சமமான இங்கும் கிரிவலம் நடத்தப்படுகிறது என்றார்.

இத்தலத்தின் ஐந்தாவது பிரகாரமாக கருதப்படும் ஆலயத்தை சுற்றியுள்ள மாடவீதி தான் கிரிவலப் பாதையாக உள்ளது. இந்த சுற்றுப்பாதை ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த பாதையில் கிரிவலம் வரும் பக்தர்கள் 16 தடவை சுற்றுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இத்தலத்து ஈசன் 16 கலைகள் கொண்ட சந்திர அம்சத்துடன் இருப்பதால் கிரிவலத்தை 16 தடவை என்ற எண்ணிக்கையில் நடத்துகிறார்கள்.

இதன் மூலம் இங்கு கிரிவலம் வரும் ஒவ்வொரு பக்தரும் 16 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறார்கள். திருவண்ணாமலை தலத்திலும் கிரிவலப் பாதை சுமார் 16 கிலோ மீட்டர் தூரம் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே திருவதிகையில் கிரிவலம் ஒவ்வொருவருக்கும் மிகுந்த பலன்கள் கிடைக்கும். இடையில் சில மாதங்கள் இங்கு கிரிவலம் நடை பெறாமல் இருந்தது.
தற்போது ஒவ்வொரு பவுர்ணமிக்கும் சுமார் 60 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். கடந்த சித்திரா பவுர்ணமி தினத்தன்று சுமார் 2 லட்சம் பேர் கிரிவலம் வந்தனர்.

கடலூர், விழுப்புரம், மாவட்டங்களில் இருந்தும் புதுச் சேரி மாநிலத்தில் இருந்து பவுர்ணமி தோறும் இங்கு பல்லாயிரக் கணக்கானவர்கள் வந்து கிரிவலம் செல்கிறார்கள். இத்திருக்கோவிலில் இறைவன் ’மகாமேரு’ (கயிலாயம்) மலையையே வில்லாக கொண்டுள்ளார். மேலும் ஆலய பரிகாரத்தில் ஜீவ முக்தி தலம் கொண்டுள்ள ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய சுவாமிகள், மிக அருகாமையில் ஜீவமுக்தி தலம் கொண்டுள்ள அருள்நந்தி சிவம், மெய்கண்டார், மணவாசங்கடந்தார், நித்தியானந்தர், ஆத்ம போதேந்திரர், பச்சகந்த தேசிகர், குழந்தைசாமி, சங்குநாத சித்தர், சங்கரலிங்க சுவாமிகள் போன்ற ஜீவமுக்தி அடைந்த மகான்கள் பவுர்ணமி அன்று ஆலய வலம் வருவதாக நம்பப்படுகிறது.

பவுர்ணமி தினத்தன்று இவ்வாலயத்தை 16 முறை வலம் வருவதால் கைலாய தரிசனம் பெற்ற பலனும், அருளும் ஜீவமுக்தி அடைந்த மகான்களின் ஆசியும் கிடைப்பதாக நம்பிக்கை. இத்தலத்தில் மூலவர் பின்புறம் சுவாமி உமாமகேஸ்வரர் திருமணக் கோலத்தில் அருள்பாலிப்பதால் அருள்மிகு வீரட்டானேஸ்வரரை தரிசனம் செய்பவர்களுக்கு திருமண தடைகள் நீங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =