வாழ்வாதாரத்தை இழந்து வாடுகிறோம்; பினாங்கு பேச்சா வண்டி ஓட்டுநர்கள் குமுறல்பினாங்கு மாநிலத்தில் பேச்சா (ரிக்ஷா ) வண்டி ஓட்டுநர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து இந்த ஊரடங்கு காலத்தில் ஒரு வேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் தவிக்கிறார்கள்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி பினாங்கு மாநிலத்திற்குச் சுற்றுப்பயணிகள் வருகை அளிப்பதை நிறுத்திவிட்ட பிறகு, சுற்றுப்பயணிகளை நம்பி தங்கள் வாழ்வாதாரத்தை நடத்திய பேச்சா ஓட்டுநர்கள் அனைவரும், நிலை குத்தி நிற்கிறோம் என்று பேச்சா ஓட்டுநர்கள் கூறினர்.
சுற்றுபயணிகள் இருந்த பொது ஒரு வேளை சமாளித்து வந்தோம் ஊரடங்கு அமல்படுத்திய நாள் முதல் மிகவும் சிரமத்தில் எங்கள் வாழ்வு சென்று கொண்டிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.நாங்கள் பேச்சா நிறுத்தும் இடத்திற்குச் சென்று பார்த்தால் வரிசையாக எங்கள் பேச்சா வண்டிகள் சவாரி இல்லாமல் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் அவர்கள் கூறினர். கோவிட்-19 தொற்று தொடங்கிய சிறிது காலத்தில் பினாங்கு மாநில அரசாங்கத்தால் சிறு தொகை ஒன்று கிடைக்கப்பெற்றது ஆனால், அது ஒரு மாதம் கூட தக்குப் பிடிக்க முடியவில்லை. கடந்த 2020 பிப்ரவரி தொடங்கி இன்று வரையில் நாங்கள் அரை வயிறும், கால் வயிறுமாக வாழ்ந்து வருவதாக இராமநாதன் என்ற பேச்சா ஓட்டுநர் கூறினார். மேலும் வாடகை வீடுகளில் தங்கி பேச்சா ஓட்டி வந்த நாங்கள் இன்றைய சூழலில் வாடகை வீட்டுப் பணம் கூட கட்ட முடியாமல் பேச்சா வண்டியில் தங்கி காலத்தைக் கடத்துகிறோம் என்று அலி என்ற பேச்சா ஓட்டுநர் தன் குறையை விவரித்தார்.
இதனைத் தொடர்ந்து பேச்சா ஓட்டுநர்களின் வறுமையை அறிந்து தஞ்சோங் பி.கே,ஆர் தொகுதித் தலைவர் ஃபௌசி நோர்டின் பேச்சா ஓட்டுநர்களின் வாழ்வில் விளக்கேற்றி வையுங்கள் என்று கேட்டுக்கொண்டார். இவர்களின் நிலை குறித்து பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கொன் இயோவை நேரடியாகச் சந்தித்து நிலைமையை எடுத்து வைக்கப்போவதாகவும் கூறினார். இந்த சந்திப்பு கோவிட்-19 நடமாட்ட அலை முடிந்த பிறகு தொடங்கும் என்றும், பினாங்கு முதல்வரைச் சந்தித்தால், இந்த பேச்சா ஓட்டுநர்களின் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். ஜார்ஜ்டவுன் பகுதியில் பேச்சா ஒட்டுநர்களான 60 பேருக்கு பி.கே.ஆர் தஞ்சோங் தொகுதி அமைப்புக் குழுவினர் உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =