வாதுகளை களையெடுத்தால் அசுத்தங்கள் நீங்கும்

0

பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால், துன் மகாதீர், அன்வார் இப்ராஹிம் ஆகியோரில் யார் பிரதமர் என்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ள நிலையில், அன்வார் இவற்றையெல்லாம் மறந்து, தோட்ட வேலையில் ஈடுபட்டுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாசகம் இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு அவர் சூசகமாக சொல்லும் ஒரு செய்தியாகவும் அமைந்துள்ளது.
அவரின் டுவிட்டரில் வெளியிடப்பட்ட பல புகைப்படங்களைக் கண்ணுற்ற பலர், பிரதமராவதற்கு முன்னர், கட்சியில் களையெடுக்கும் வேலையை அவர் செய்கிறாரா என்று பலரும் விமர்சித்துள்ளனர்.
தமது சிகாம்புட் வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்துள்ள மூங்கில்களை வெட்டி சீர்படுத்தும் வேலையில் அவர் ஈடுபடும் பல புகைப்படங்கள் வெளியிடப் பட்டுள்ளன.
இதனிடையே, துன் மகாதீர் பிரதமராகவும் அன்வார் துணைப் பிரதமராகவும் முடிவெடுக்கப்பட்டு, பிகேஆரின் முடிவுக்குக் காத்திருப்பதாக ஜசெகவின் அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்த பின்னர், அதனை அன்வாரின் அரசியல் செயலாளர் ஃபார்ஹாஸ் வாஃபாவும் பிகேஆரின் அமைப்புச் செயலாளர் நிக் நஸ்மியும் கடுமையாகச் சாடி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே பிகேஆரின் மத்திய செயலவைக் கூட்டம் இன்று நடைபெறுவதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் ஜசெக கட்சியின் அந்தோணி லோக் மகாதீர் முகமதுவை பிரதமராக ஏற்றுக் கொள்வதைப்பற்றி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அவர் நேற்று ஒரு பதில் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
பிகேஆர் கட்சி, ஜசெக மற்றும் அமானா ஆகிய இரு கட்சிகளும் கடந்த 20 ஆண்டுகளாக வழங்கி வந்த ஆதரவை தாம் மதிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் தற்சமயம் கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மீண்டும் நிலை நாட்டுவது தொடர்பாக பக்காத்தான் ஹராப்பான் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள சில அறிக்கைகள் தொடர்பாக எழுந்துள்ள சில குழப்பங்களுக்கு தாம் தெளிவுபடுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாதீர் பிரதமர் வேட்பாளர் அல்ல
துன் மகாதீரை பிரதமர் வேட்பாளராக பக்காத்தான் ஹராப்பான் ஒரு போதும் முன்மொழியவில்லை என அவர் கூறினார். இதை தெளிவுபடுத்துவதற்கு தேதி வாரியாக நடந்த நிகழ்வுகளை அவர் தொகுத்து கூறினார்.
மே 30ஆம் தேதி பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்றக் கூட்டம் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை 9ஆவது பிரதமர் வேட்டபாளராக துன் மகாதீரிடம் தெரிவிப்பதற்கு முடிவு செய்தது.
ஜூன் 1ஆம் தேதி முகமட் சாபு, அந்தோணி லோக் ஆகியோருடன் நானும் பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்றத்தின் பிரதிநிதியாக துன் மகாதீர் முகமதுவை சந்தித்தோம். அந்த சந்திப்பில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தான் அடுத்த பிரதமர் வேட்டபாளர் என்று நாங்கள் வழங்கிய பரிந்துரையை துன் மகாதீர் முகமது நிராகரிக்கவில்லை. மாறாக அவர் அவருடன் இருக்கும் மற்ற பெர்சத்து உறுப்பினர்களுடனும், வாரிசான் கட்சியின் தலைவர் ஷாஃபி அப்டாலுடனும் கலந்து ஆலோசித்துவிட்டு தனது பதிலை தெரியப்படுத்துவதாக கூறினார். அப்பொழுது மாற்று வேட்பாளர் பெயர் எதுவும் முன்மொழியப்படவில்லை.
ஜூன் 3ஆம் தேதி
பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஷாஃபி அப்டாலைச் சந்தித்து பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்டபாளர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்தான் என்பதை விளக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், வாரிசான், மகாதீர் தரப்பு பெர்சத்து ஆகியோரை இணைத்த பக்காத்தான் ஹராப்பான் பிளஸ் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஜூன் 4ஆம் தேதி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஷாஃபி அப்டாலைச் சந்தித்து பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்டபாளர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்தான் என்பதை தெரிவித்தார்.
ஜூன் 9ஆம் தேதி பக்காத்தான் பிளஸ் கூட்டம் கெஅடிலான் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. அப்பொழுது அனைத்து பக்காத்தான் ஹராப்பான் கட்சி தலைமைத்துவத்திற்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்பதை அறிவித்தது. ஆனால், 6 மாதங்களுக்கு தானே பிரதமராக இருக்க மகாதீர் அக்கூட்டத்தில் பரிந்துரைத்தார். பல இனங்களைக் கொண்ட கட்சிக்குத் தலைமையேற்றுள்ளதால், அன்வாரை பிரதமராக ஏற்றுக் கொள்ள முடியாது என மகாதீர் கூறினார்.
அதுதான் மகாதீரின் நிலைப்பாடு என்றால், 6 மாதங்களுக்குப் பிறகும் தான் பல இனங்களைப் பிரதிநிதிக்கும் கட்சிக்குத் தலைவராகத்தானே இருப்பேன். அப்பொழுது என்ன நடக்கும் என்று அன்வார் வினவினார்.
ஒரு வாரத்தில் இதற்கு ஒரு தீர்வு காணப்படும் என்று அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஜூன் 12ஆம் தேதி பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்றம் மீண்டும் டத்தோஸ்ரீ ஷாஃபி அப்டால் மற்றும் மகாதீரை சந்திக்க பிரதிநிதிகளை அனுப்ப முடிவு செய்தது. காலிட் சமாட், சம்சுல் இஸ்கண்டார் மற்றும் அந்தோணி லோக் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர்.
ஜூன் 13ஆம் தேதி பக்காத்தான் ஹராப்பான் பிளஸ் கூட்டத்தில் அனைத்து பக்காத்தான் ஹராப்பான் தோழமைக் கட்சிகளும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தான் பிரதமர் வேட்பாளர் என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொண்டனர்.
அப்பொழுது மகாதீர் முகமது மீண்டும் தன்னை பிரதமர் வேட்பாளராக முன்மொழியும்படி கேட்டுக் கொண்டார். இம்முறை 6 மாதம் போதாது குறைந்தது 12 மாதம் தான் பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மட்டுமல்லாது டான்ஸ்ரீ முஹிடின் யாசின் செய்துள்ள தவறுகளைச் சரி செய்ய 12 மாதங்களுக்குத் தாம் பிரதமராக இருக்க வேண்டும் என மகாதீர் மீண்டும் வலியுறுத்தினார். அப்பொழுதும் அவர் ஒரு தீர்க்கமான கால வரம்பைத் தெரிவிக்கவில்லை.
ஆனால், 12 மாதம் என்பது நீண்ட காலம் என்பதால், 6 மாதங்களுக்கு மட்டும் மகாதீர் பிரதமராக இருக்க ஷாபி ஆலோசனை வழங்கினார்.
இருப்பினும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தமது பிரதமர் வேட்பாளர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்தான் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
அதைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ மன்றம் தனது கூட்டத்தை நடத்தி ஜூன் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று ஒரு முடிவை எடுப்பதற்கு ஒப்புக் கொண்டது.
ஜூன் 16ஆம் தேதி
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சரவாக் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்ததனால் ஜூன் 16 ஆம் தேதி நடக்கவிருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு மற்றும் அந்தோணி லோக்கிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே,பிரதமர் வேட்பாளராக மகாதீர் முன்மொழியப்பட்டுள்ளார் என்ற தகவலில் உண்மை இல்லை என சைபுடின் ஆணித்தரமாக தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பானைப் பொறுத்தவரையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமியைத் தவிர மாற்று வேட்பாளர் விவாதிக்கப்படவும் இல்லை, முன்மொழியப்படவும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
தமது கட்சியும் அமானாவும் மகாதீரை பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பதாக ஜசெக அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக் நேற்று முன்தினம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டுமுறை அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராக வருவதற்கு தடங்கலாக இருந்த மகாதீர் முகமது இம்முறையும் அதே பாணியில் செயல்படுவார் என்று பரவலாக கருதப்படுகிறது. சூழ்நிலையின் காரணமாக இரண்டாவது முறையாக மகாதீருக்கு பிரதமராக வாய்ப்பளித்தும் அவரால் சிறையில் அடைக்கப்பட்ட அன்வார் இப்ராஹிம் மகாதீருக்கு பழைய பகைமையை மறந்து முழு ஆதரவு வழங்கியும் மகாதீர் அன்வார் இப்ராஹிம் அடுத்த பிரதமராக வருவதை தனது திடீர் பதவி விலகலால் தடுத்துவிட்டார் என்ற எதிர்ப்பு அலை கெஅடிலான் அடிமட்டத் தொண்டர்களிடம் தீவிரமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × five =