வாடகைத் தாய்மார்களின் நெகிழவைக்கும் நினைவுகள்

இந்தியாவில் திருமணமான தம்பதிகளில் பத்து சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் கர்ப்பம்தரிப்பதில் சிக்கலை எதிர்கொள்கிறார்கள். அவர்களில் சிலர் வாடகைத் தாய்மார்களை நாடுகிறார்கள். பெரும்பாலும் வறுமையில் வாடும் பெண்களே வாடகைத்தாய் ஆவதற்கு சம்மதிக்கிறார்கள். குழந்தைக்கு ஏங்கும் தம்பதியும் வாடகைத்தாயும் நேரடியாக சந்தித்து பேசி, உடன்பாட்டிற்கு வரும்போது பெருமளவு சிக்கல்கள் தோன்றாமல் கர்ப்பமும், பிரசவமும் நிகழ்ந்து இருதரப்பினரும் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் இதில் இடைத்தரகர்கள் தலையிடும்போது பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கிவிடுகின்றன.

இன்னொருவருக்கான குழந்தையை தனது கருப்பையில் சுமக்கும் வாடகைத் தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் உணர்வுரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். ‘வறுமையால் தாய்மையை விலை பேசிவிட்டேனே!’ என்ற குற்றஉணர்வு அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படுவதாக மனநல நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். குற்ற உணர்வு ஏற்படக்கூடாது என்பதற்காக பெரும்பாலான தம்பதிகள் தங்கள் உறவினர்களையோ, தெரிந்தவர்களையோ வாடகைத்தாயாக ஏற்றுக்கொள்ள விரும்புகின்றனர். அதே நேரத்தில் ‘தெரிந்தவர்களாக இருந்தால், எதிர்காலத்தில் அந்த வாடகைத் தாய்மார்களால் தங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுவிடுமோ’ என்ற பயமும் சில தம்பதிகளுக்கு இருக்கிறது.


வாடகைத்தாய் கருவை சுமப்பதில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை, குழந்தையை ஏற்றெடுக்கும் தம்பதிகளின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் இருக்க வேண்டியதிருக்கிறது. அந்த தம்பதிகள் வாடகைத் தாயை தங்கள் கண்காணிப்பிலோ அல்லது மருத்துவமனையிலோ பத்து மாதங்களுக்கு மேல் வைத்திருக்கவேண்டியதிருக்கிறது. அத்தனை மாதமும் அனேகமான வாடகைத் தாய்மார்கள் கவலையோடும், மனஅழுத்தத்தோடும்தான் காணப்படுகிறார்கள். அதனால் வாடகைத் தாய்மார்களுக்கும் தம்பதிகளுக்கும் இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடுகளும், மோதல் போக்கும் ஏற்படுவதுண்டு.

வாடகைத் தாய்மார்களுக்கு ஏற்கனவே சொந்த குழந்தைகள் இருக்கும். அந்த குழந்தைகள் பட்டினியோடு சொந்த வீட்டில் இருந்துகொண்டிருக்கலாம். வாடகைத்தாய்க்கோ கர்ப்பகாலத்தில் தனி வீட்டில் விலை உயர்ந்த உணவுகள் கிடைத்துக்கொண்டிருக்கும். அப்போது அவள் ஒவ்வொரு கவளம் உண்ணும்போதும் அவளது சொந்த குழந்தைகள் நினைவுக்கு வந்து அதை உண்ண முடியாமலும், ஒதுக்க முடியாமலும் தவிக்கும் நிலை ஏற்படும். அந்த தவிப்பு அவளது ஹார்மோன் சுரப்பில் சீரற்ற நிலையை உருவாக்கும். கர்ப்பக் காலத்தில் தாயின் ரத்தம்தான் கர்ப்பப்பைக்கும் போகிறது. அந்த நேரத்தில் தாயின் மனநிலையை பொருத்தே வயிற்றில் இருக்கும் குழந்தையின் மனநிலையும் அமையும்.

கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு மிகப்பெரிய மருந்து, அவளது கணவனின் அருகாமைதான். கணவனின் அருகாமை அவளுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும். ஆனால் வாடகைத்தாய்மார்களின் அருகில் அவளது கணவனை நெருங்க அனுமதிக்கமாட்டார்கள். அதுவும் அவளுக்கு மனஅழுத்தத்தை தோற்றுவிக்கும்.

தனது சொந்த குழந்தையை வயிற்றில் வளர்க்கும்போது அந்த பெண் தாய்மையின் பூரிப்பில் சந்தோஷமாக இருந்திருப்பாள். ‘எப்போது தனது குழந்தையின் முகத்தை பார்ப்போம்’ என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்பாள். ஆனால் வாடகைத்தாயிடம் அந்த எதிர்பார்ப்பு எதுவும் இருக்காது. தனது வயிற்றில் அடுத்தவரின் குழந்தை வளர்ந்துகொண்டிருக்கும்போது பெரும்பாலும் அவள், ‘பிரசவம் எப்போது முடியும்? ஒழுங்காக பேசிய பணத்தை தந்துவிடுவார்களா? கணவர் முன்புபோல் முழுஅன்பு காட்டுவாரா?’ என்ற கேள்விகளோடு மனக்குழப்பத்தில் இருந்து கொண்டிருப்பாள்.

வாடகைத்தாய்க்கு முழு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வழங்குவதுதான் அவளது வயிற்றில் வளரும் தமது எதிர்கால சந்ததிக்கு நல்லது என்பது, அந்த தம்பதிகளுக்கு தெரியும். அதனால் அவர்கள் அவளுக்கு உணவு, பொழுதுபோக்கு, ஓய்வு போன்றவைகளை எல்லாம் வழங்குவார்கள். ஆனால் அவள் மனதோ அந்த பத்து மாத சொகுசை ஏற்றுக்கொள்ள முடியாமல், நாளை என்ன நடக்கும் என்ற ஏக்கத்துடனே இருந்துகொண்டிருக்கும்.

வாடகைத்தாய் பிரசவித்ததும் அவளிடம் குழந்தையை காட்டுவதில்லை. குழந்தை ஆணா, பெண்ணா என்றும் சொல்வதில்லை. அதை ஏமாற்றமாக எடுத்துக்கொண்டு நிராசையாகிவிடும் பெண்களில் சிலரின் சொந்த வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சில நேரங்களில் கணவரின் குடும்பத்தினரே அவளது தியாகத்தை மறந்து ‘பணத்திற்காக குழந்தை பெற்றுக்கொடுத்தவள்தானே!’ என்று ஏளனமாக பேசுவதும் உண்டு.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள நிறைய பணம் செலவாகும். அதில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே இந்தியாவில் செலவாகிறது. அதனால் இங்கு வாடகைத் தாய்மார்களின் தேவை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

இதனை கவனத்தில் கொண்டு இந்தியாவில் வாடகைத்தாய்மார்களை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் மருத்துவ மையங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் வாடகைத்தாய்மார்களைத் தேடி வரும் வெளிநாட்டு தம்பதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குஜராத்தை சேர்ந்த டாக்டர் நைனா பட்டேல் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாடகைத்தாய்மார்களை கருத்தரிக்க வைக்கும் மையத்தை நடத்தி வருகிறார். இது குழந்தை பாக்கியம் இல்லாத வெளிநாட்டினர் அதிகம் பேர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று செல்லும் மையமாக விளங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =