வாங் கிளியான் அரச விசாரணை ஆணைய அறிக்கையை வெளியிடுங்கள்!

0

கோலாலம்பூர், செப். 17 –
பெர்லிஸ், வாங் கிளியானில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் சம்பந்தமான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அரசு விரைவாக வெளியிட வேண்டுமென்று அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அச்சம்பவம் தொடர்பில், அந்த விசாரணை முடிக்கப்பட்டு, அதன் அறிக்கை பேரரசரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இவ்வாண்டு ஜனவரியில், அவ்வறிக்கை அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, அதன் பின்னர், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் முஹிடின் யாசின்அறிவித்திருந்தார்.
அது சம்பந்தமாக வெளிநாட்டு அரசு சாரா இயக்குமான ஃபோர்ட்டி ரைட்ஸ். அந்த அறிக்கையை அரசு தாமதப்படுத்துவதால், அச்சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது தெரியாமல் இருப்பதோடு அதில் சம்பந்தப்பட்ட வர்கள் நீதியின் முன் நிறுத்தப் படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், அதில் கொல்லப்பட்ட அந்நிய நாட்டவர்களின் குடும்பங்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்று அது தனது அதிருப்தையைத் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மலேசியாவுக்கு கடத்திவரப்பட்ட மியன்மார் அகதிகள், வாங் கிளியானில் தடுத்து வைக்கப்பட்டு, கொடுமைப் படுத்தப்பட்டும், கொன்று புதைக்கப்பட்டனர். பெரும்பாலும், மலேசியாவுக்குக் கொண்டுவர செலவுக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியவர்களே அம்மாதிரியான கொடுமைக்கு ஆளாயினர்.
தாய்லாந்து எல்லையில் அச்சம்பவம் நடந்தது சம்பந்தமாக அந்நாட்டு அரசு 9 அரசு அதிகாரிகள் உட்பட 67 பேர் மீது வழக்குகளைத் தொடர்ந்தது.
ஆனால், மலேசியாவில் வெறும் 4 அந்நிய நாட்டவர்கள் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களும் ஆள்கடத்தலில் பெறும் பங்கு வகிக்கவில்லை என்று தெரிய வருவதாக ஃபோர்ட்டி ரைட்ஸ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
ஆள்கடத்தல் நடவடிக்கையில் மலேசியா முக்கிய தளமாக இயங்குவதாக இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு, வாங் கிளியான் காட்டுப் பகுதியில் 100 மனித எலும்புக் கூடுகளும் 150 மனித புதைகுழிகளும் பாதுகாப்புப் படையினரால் கண்டு பிடிக்கப்பட்டது. அதில் தனிநபர்களும் நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்ட ராணுவ வீரர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
பல்வேறு தரப்பினரின் கண்டனத்தைத் தொடர்ந்து, முன்னாள் தலைமை நீதிபதி அரிஃபின் ஸக்காரியா தலைமையில் நூர்பாஹ்ரி பஹாருடின், ரஸாலி இஸ்மாயில், ஜுனைடா அப்துல் ரஹ்மான், நஸிரா ஹுசேய்ன், தான் செங் கியாவ் ஆகியோர் அடங்கிய அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 5 =