வர்த்தகம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு மலேசிய உலோக மறுசுழற்சி சங்கம் கோரிக்கை


நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமல்படுத்தப்பட்ட இப்போதைய காலக்கட்டத்தில் பழைய உலோக மற்றும் மறுசுழற்சி பொருள் வர்த்தகத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்துள்ளது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் தங்களது வேதனையை வெளியிட்டுள்ளனர்.
வர்த்தகம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் தொழில் செய்யும் இடத்திற்கான, அலுவலகத்திற்கான வாடகை கட்டணம், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணத்தையும் செலுத்த முடியாத சிரமமான சூழ்நிலைக்கு இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் உள்ளாகியுள்ளதாக பெர்கெசோ எனப்படும் மலேசிய பழைய உலோகம் மற்றும் மறு சுழற்சி சங்கத்தின் நிர்வாக செயலாளர் எஸ். பாரதிதாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பழைய உலோகம் மற்றும் மறுசுழற்சி சங்கத்தின் உறுப்பினர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதையும் அஸ்மின் அலி மற்றும் டத்தோஸ்ரீ சரவணணுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள், சிறு தொழில் அதிபர்கள் மற்றும் பழைய பொருட்கள் விற்பனையை தங்களது வருமானத்திற்காக நம்பியிருக்கும் அன்றாட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு பழைய உலோகம் மற்றும் மறுசுழற்சி பொருள் விற்பனைக்கு அனைத்துலக வாணிக தொழில்துறை , மனித வள அமைச்சு மற்றும் இதர அரசாங்க துறைகள் அனுமதி வழங்க வேண்டும் என பாரதிதாசன் தமது கடிதத்தில் கேட்டுக்கொண்டார்.
எஸ்.ஓ.பி மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை விதிமுறைக்கு ஏற்பவும் தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதற்கும் தங்களது உறுப்பினர்கள் தயாராய் இருப்பதால் தங்களது கோரிக்கைக்கு அரசாங்கம் கருணையோடு பரிசீலிக்க வேண்டும் என பாரதிதாசன் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × three =