வர்த்தகத்தை மேற்கொள்ள பயிற்சிகளை வழங்க மைக்கி முனையும்

இந்தியர்கள் வர்த்தகத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நாடு முழுவதும் மைக்கியும் மித்ராவும் இணைந்து வர்த்தகர்களுக்கான நிகழ்வுகளை நடத்தி வருவதற்கு காரணம் நம் மக்களை வர்த்தகத்தில் வெற்றி பெற வைப்பதற்கு மட்டுமல்ல. மாறாக, புதிய வர்த்தகர்களை உருவாக்கும் முயற்சியாக முறையான ஆவணங்கள், பயிற்சிகளை வழங்கவும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்கள் சம்மேளனமான மைக்கி களமிறங்கியுள்ளது என சுங்கை சிப்புட் மாநாடு மையத்தில் நடைபெற்ற வர்த்தகர்களுக்கான நிகழ்வில் ம.இ.கா தேசியத் தலைவர், டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சுங்கை சிப்புட்டில் இருக்கும் வர்த்தகர்கள் வர்த்தகத்தில் பீடு நடை போட, கடனுதவி பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்று அரசாங்கத்தை சேர்ந்த நிறுவனங்கள் கடனுதவி பெற வழிக்காட்டிகளாக இங்கு வந்துள்ளனர். பி.எஸ்.என், தெக்குன், எஸ்..எம்.ஈ. உட்பட பல முகப்புகள் இங்கு போடப்பட்டுள்ளன. வர்த்தகர்கள் கடனுதவியை பெற சிரமப்படுகின்றனர். குறிப்பாக, இந்திய வர்த்தகர்களுக்கு இந்த நிகழ்வு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வர்த்தக ரீதியில் மக்களுக்கு உதவி செய்ய அரசாங்கத்தில் பல திட்டங்கள் உள்ளன. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதிலும் தற்பொழுது கோவிட் தருணத்தில் நாம் பெரும் பொருளாதார ரீதியில் கஷ்டப்படுகிறோம். ஆனால், அதிலிருந்து நாம் மீண்டு வர வர்த்தகர்களுக்கு கடனுதவி தேவைப்படும். அவர்களுக்கும் உதவி செய்ய அரசு நிறுவனங்கள் உள்ளன. அதில் சிறு வர்த்தகர்கள் உட்பட அனைவருமே பயன்பெற்றுக் கொள்ளலாம்.
நாடு தழுவிய நிலையில் பல இடங்களில் இந்த வர்த்தக நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வினை செய்வதில் மைக்கியும் மித்ராவும் முழுமையாக கை கோர்த்திருப்பதற்கு மிகவும் நன்றியை சமர்ப்பிக்கிறேன். வர்த்தகர்களாக இருப்பவர்கள் மட்டுமல்ல, வர்த்தகத்தில் தடம் பதிக்க விரும்புவோர் முறையான ஆவணங்கள், பயிற்சிகள் தொடர்பாகவும் இங்கு விளக்கமளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை அனைவரும் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது போன்ற நிகழ்வுகளை மைக்கி நடத்த நான் 3 லட்சம் வெள்ளி நிதியுதவி வழங்குவேன் என்றார்.
இந்நிகழ்வில் இளம் வர்த்தகர்கள், கடனுதவியை பெற விரும்புபவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =