வருமானக் குறைவால் அவதியுறுகிறோம் பினாங்கு சிறு தொழில் வியாபாரிகள் பரிதவிப்பு!


  பினாங்கு லிட்டல் இந்தியா பகுதியில் பலகாரம் செய்யும் சிறு வியாபாரிகளான ஜெகன் – தேவி தம்பதியினர் குறைந்த வருமானத்துடன் வாழ்வை நடத்துவதற்கு சிரமப்படுவதாக தெரிவித்தனர்.அண்மையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து மக்கள் நடமாட்டம் இல்லாமல் பினாங்கு லிட்டல் இந்தியா பகுதி இருப்பதால் தங்களின் வியாபாரம் பெருமளவில் பாதித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
  முன்பெல்லாம் நாளொன்றுக்கு வெ. 250 கிடைத்த நிலையில் தற்போது 70 வெள்ளி மட்டுமே கிடைப்பதால் தங்களின் வாழ்வை நடத்த மிகவும் சிரமத்தில் இருப்பதாக ஜெகன் மேலும் தெரிவித்தார்.
  கடந்த ஆறு மாதங்களாக பினாங்கு லிட்டல் இந்தியா பகுதியில் வியாபாரம் செய்து வருவதாகவும் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்துவதற்கு வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்கு வருமானமின்றி தவிப்பதாகவும் கூறிய ஜெகன், சிறு தொழில் செய்யும் எங்களுக்கு மாநில அரசாங்கம் கடன் உதவியை வழங்க வேண்டும் என்று ஜெகன் கேட்டுக் கொண்டார்.
  ஜூரு தாமான் டெலிமா பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறு தொழில் செய்து காலை உணவினை விற்பனை செய்யும் முத்தையா தற்போது ஊரடங்கு காலமாக இருப்பதால் உணவகத்தில் உட்கார்ந்து உணவருந்தும் நிலை இல்லாத வேளையில் வருமானம் இழந்து வாடுவதாக கூறினார்.
  நாளொன்றுக்கு வெ 250.00 முன்பு கிடைத்துக்கொண்டிருந்தது தற்போது வெ. 80 மட்டுமே கிடைக்கிறது.
  சொற்ப வருமானத்தை கொண்டு குடும்பத்தையும், வியாபாரம் பாணியாளர் சம்பளம் கடை வாடகை என செலவுகள் இருப்பதால் மிக சிரமமான சூழ்நிலை உருகியிருப்பதாக முத்தையா தெரிவித்தார்.
  சிறு தொழில் வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடனை கொடுத்தால் எங்களைப் போன்ற சிறு வியாபாரிகள் ஒரு அளவு சமாளிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
  ஜூரு, செபராங் பிறை மத்திய மாவட்டத்தில் இந்திய பலகாரங்கள் சிறு தொழில் விற்பனையில் ஈடுபட்டு வரும் கோகிலா – சுபாஷ் தம்பதியினர், கடந்த 9 ஆண்டுகாலமாக பலகாரங்களை விற்பனை செய்து வருவதாக கூறினர்.
  தற்போது ஊரடங்கு காலமாக இருப்பதால் வருமானம் இழந்து தவிப்பதாக கூறினர்.
  குடும்பத்தை நடத்த தாங்கள் தொடர்ந்து வியாபாரம் செய்து வருவதாக கோகிலா தெரிவித்தார்.
  அரசாங்கம் எங்களுக்கு சிறு கடன் உதவிகளையோ அல்லது வட்டியில்லாக் கடனையோ வழங்க வேண்டும் என கோகிலா முறையிட்டார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  4 + 18 =