வரி ஏய்ப்பு நாட்டிற்கு செய்யும் துரோகம்!

0

சுப்பிரமணியம், பினாங்கு
கே: முன்னாள் நீதிபதி முகமது அரிஃப்பை சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைத்தது யார்?

ப: வழக்கறிஞராக பணியாற்றிய முகமது அரிஃப், பிறகு உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். பிறகு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றார். 2015 ஆம் ஆண்டு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது முந்தைய வழக்கறிஞர் நிறுவனத்தில் மீண்டும் வழக்கறிஞராக பணியைத் தொடர்ந்தார். அவர் நீதித்துறையில் மிகவும் மரியாதைக்குரிய நீதிபதியாக இருந்தார். அண்மையில் அவரது சபாநாயகர் பதவி நீக்கம் தொடர்பாக வழங்கிய பேட்டியில், அப்பதவிக்கு தான் யாரிடமும் கையேந்தவில்லை. யாரிடமும் சிபாரிசு செய்யுமாறு கேட்கவில்லை. எனது கடந்த கால சிறப்பான செயல்பாட்டை கருத்தில் கொண்டு இந்தப் பதவி வழங்கப்பட்டது. அதை நான் ஒரு தேசிய சேவையாகத் தான் கருதினேன். பதவியில்லாமல் வாழ முடியாத நிலையெல்லாம் எனக்குக் கிடையாது. அதனால், பதவி வந்த போதிலும் நான் பெரும் பூரிப்படையவில்லை. பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின் சோர்ந்துவிடவும் இல்லை. ஒரு மரியாதைக்குரிய பதவியில் ஒருவர் அரசியல் சாசன முறையைப் பின்பற்றி அகற்றப்பட வேண்டும் என்ற நடைமுறையில் மட்டும் நான் அக்கறை கொண்டிருந்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
அரிஃப் 2015 ஆம் ஆண்டு வரை பாஸ் கட்சியிலும் பிறகு அதிலிருந்து பிரிந்து அமானா கட்சி உருவாகிய பொழுது அமானாவில் இணைந்து 2018 ஆம் ஆண்டு சபாநாயகர் பதவி அவருக்கு முன் மொழியப்பட்ட போது அமானாவிலிருந்து விலகிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


கே: முகமது அரிஃப்பை சபாநாயகர் பதவியிலிருந்து அகற்றியது பற்றி தங்களது கருத்து என்ன?
ப. ஒரு ஜனநாயக நாட்டின் அடித்தளமே நாடாளுமன்றம் தான். அந்த மாட்சிமை மிக்க மன்றத்தின் நாயகராக தீவிர அரசியலில் இல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டது மலேசிய ஜனநாயக மரபின் மீது ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், எவ்வித காரணமும் இன்றி அரசியல் சாசனத்திற்கு எதிராக சபாநாயகரை இரண்டே வாக்குப் பெரும்பான்மையில் அகற்றியிருப்பது மலேசிய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் ஒரு கரும்புள்ளிதான்.

சந்திரன், மாசாய், ஜொகூர்
கே: டத்தோஸ்ரீ நஜிப் துன் ரஸாக் மீண்டும் பிரதமராக வருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுவது உண்மையா?

ப: மலேசிய வரலாற்றில் இதுவரை டத்தோஸ்ரீ நஜிப் துன் ரஸாக்கைப் போல் அரசியல் செய்யக் கூடிய ஒருவரை நான் பார்த்ததில்லை. துன் டாக்டர் மகாதீர் ஒருவகையான அரசியல் செய்கிறார் என்றால், நஜிப்பின் அரசியல் அவரைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது. எவ்வளவுதான் குப்புற விழுந்து புரண்டாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவதில் நஜிப்பை மிஞ்சுவதற்கு இந்நாட்டில் யாரும் கிடையாது. கோடிக்கணக்கில் அவர் வீட்டில் பணத்தைப் பறிமுதல் செய்தால் பேரப்பிள்ளைக்கு பால் வாங்கக் கூட பறிமுதல் செய்து விட்டார்கள் என்று அரசியல் செய்கிறார். 1எம்டிபி மூலம் அவரது சகாக்கள் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் தொகையை அரசாங்கம் மீட்டுக் கொண்டு வந்தால் இந்த விவகாரத்தை முறையாக கையாண்டிருந்தால் இன்னும் அதிகமான தொகையை மீட்டுக் கொண்டு வந்திருக்கலாம் என்கிறார். தனது வங்கிக் கணக்கில் பட்டுவாடா செய்யப்பட்ட 261 கோடி வெள்ளிப் பணம் நன் கொடையாக வந்தது என்று ஆரம்பித்து அவை அனைத்தும் தான் அறியாமலே வந்தது, தான் அறியாமலே சென்றது என்று கூறுகிறார். அவர் மீது நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு கொண்டு வந்தால் தன்னை மற்றவர்கள் நம்பிக்கை மோசடிக்கு ஆளாக்கி விட்டார்கள் என்று சாட்சியம் கூறுகிறார். நம்பிக்கை மோசடியில் பணம் இழந்தவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், மோசடியால் பாதிக்கப்பட்டவர் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் இருந்ததைப் பார்த்திருக்கிறோமா… இவ்வளவும் கூறுகிறார். இவை அனைத்தையும் கொஞ்சம் கூட கூசாமல் கூனாமல், குறுகாமல் மிகத் தெளிவான முகபாவனையோடு சொல்கிறார். அப்ப… அவரது இந்த மனதிடம் மீண்டும் பிரதமர் அரியாசனத்தில் அமர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


கே: நஜிப் துன் ரஸாக் கோடிக்கணக்கில் வருமான வரி கட்டவில்லை என்று கூறப்படுகிறதே.. இதுவரை வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்?
ப. சம்பளம் ஒரு புறம், கிம்பளம் ஒரு புறம் என்று அரசியல்வாதிகள் வருமானத்தில் ஒரு மரபு உண்டு. இதில் சம்பளத்திற்கு வரிகட்டலாம். கிம்பளத்திற்கு வரி கட்ட முடியுமா? ஆனால், டத்தோஸ்ரீ நஜிப் விவகாரத்தில் அது வேறுவிதமாக இருக்கிறது. வருமானம் ஒரு புறம். அவருக்கே தெரியாமல் வந்த நன்கொடை ஒரு புறம். இதில் எதற்கு அவர் வரி கட்டுவார்.
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரி கட்டுவது பற்றி நஜிப் துன் ரஸாக் ஒரு வலுவான உரையாற்றியிருந்தார். நாம் வருமான வரி கட்டுவதன் வழி மக்களுக்கு உதவுகின்றோம். நாட்டிற்கு உதவுகின்றோம். வரி கட்டுவது என்பது நாம் நம் நாட்டிற்கு காட்டுகின்ற விசுவாசமாகும். மாறாக வரி கட்டாமல் ஏமாற்றுவது நாட்டிற்கு செய்கின்ற துரோகமாகும் என அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதுவரை வரலாற்றில் இல்லாத தொகையை வருமான வரி கட்டணக் கோரிக்கை அவரது குடும்பத்தின் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது.

பிரபாகரன், செந்தூல்
கே: கொரோனா பாதிப்பு தொடர்வதால் இந்தியாவின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுமா?

ப: இது இந்தியாவிற்கு மட்டும் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட பாதிப்பு அல்ல. கொரோனா தொற்று நோய் காரணமாக உலகளவில் ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதனால், உலகின் அனைத்து நாடுகளும் சம அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தொற்று நோயைப் பொறுத்தவரை ஆரம்ப கட்டத்தில் மருத்துவ தயார் நிலை குறைவு ஒரு பெரிய சவாலாக இருந்தாலும் இனிமேல் டெங்கி, காலரா, அம்மை போன்ற வியாதிகளை அன்றாடத் தொல்லையாக கண்டு பழகிப்போன இந்தியா இதை எதார்த்தமாக எதிர்கொள்ளும். ஆனால், இந்த தொற்று நோய்க்கு காரணமாக இருந்த சீனா மீது உலக நாடுகள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதனால் சீனாவில் உள்ள அந்நாடுகளின் முதலீடுகளை தன்னாட்டிற்குள் திருப்பி விட இந்தியா மும்முரம் காட்டுகிறது. அது சிறந்த பயனையும் தருவதாகவே தெரிகிறது. இந்தியாவில் அந்நிய முதலீடு முன்பு இருந்ததை விட அதிவேகத்தில் அதிகரித்து வருகிறது. அதற்கு ஈடாக தனது தொழில்நுட்பம், தொழில் திறன் ஆகியவற்றை உலகத் தரத்திற்கு வளர்த்துக் கொள்ள இந்திய நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. பொருளாதார ரீதியில் கொரோனா இந்தியாவிற்கு மற்றொரு பரிணாமத்தை வழங்கியிருக்கிறது என்று கூறலாம். உதாரணமாக தற்போது இந்தியாவில் புகழ் பெற்ற வாகன தயாரிப்பு நிறுவனமான டாட்டா நிறுவனம் புதிய ரக அதிநவீன வாகனங்களை உருவாக்குவதில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி வருகிறது.


கே: கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் அயாத்தியில் ராமர் கோயில் நிர்மாணிப்பு தேவையா?
ப. அயோத்தியில் ராமர்கோயில் 500 ஆண்டுகாலப் போராட்டம். ராமர் கோயில் கட்டும் பணி கொரோனா வருவதற்கு முன்பே கட்டம் கட்டமாக திட்டமிடப்பட்டுவிட்டது. ராமர் கோயில் அமைக்க அறக்கட்டளை அமைக்கப்பட்டு பூமி பூஜைக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதன் வழி அயோத்தி மக்களின் 500 ஆண்டு கால கனவு நனவாக உள்ளது. கோவில் பணிகள் முடிவடைய மூன்று ஆண்டுகள் ஆகும் என கூறப்படுறது. இந்த பூமி பூஜையை கொரோனாவை காரணம் காட்டி ஏன் நிறுத்த வேண்டும். கொரோனா காலத்திலும் ஆக்கிறமிப்பு, அத்து மீறல்களில் ஈடுபட்டு வரும் சீனாவைப் பற்றியும், தீவிரவாத நடவடிக்கைகளை தூண்டி விடும் பாகிஸ்தானைப்பற்றியும் குறை கூறாதவர்கள் சமய நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் ஆன்மீக சடங்கைப்பற்றி கேள்வி எழுப்புவது விநோதமாக இருக்கிறது.

மணியம், செராஸ்
கே: பெரிக்காத்தான் நேஷனலிடம் இழ்ந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்சமயம் அவ்விவகாரத்தில் அமைதியாக இருப்பது போல் தோன்றுகிறதே?

ப. தற்சமயம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அச்சபையில் ஆற்ற வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன. இச்சமயம் ஆட்சி மாற்றம் என்பது நிகழ்காலத்திற்குப் பொருந்தாத ஒரு நடவடிக்கையாகும். ஆகவே, அவர் அமைதியாக இருக்கிறார் என்று சொல்வதை விட விவேகமாக செயல்படுகிறார் என்று கூறலாம். ஆட்சியைப் பிடிக்க அவசரப் படுகிறார் என்று மற்றவர்கள் அவர் மீது காலம் காலமாக சுமத்தி வந்த குற்றச்சாட்டு அவரது இந்த விவேக செயலின் வழி நீர்த்துப் போயுள்ளது. மகாதீர் என்ற கொசுக் கடி அவருக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதைத் தவிர தற்சமயம் அவரது அரசியல் பயணம் முன்பை விட தெளிவாக உள்ளது.


கே: நூருல் இஸா அன்வார் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டாரா?
ப. துன் டாக்டர் மகாதீர் தலைமைத்துவத்தில் நடந்த பக்காத்தான் ஆட்சி அரசியலில் இருந்து நூருல் இஸா அன்வார் ஒதுங்கியிருக்க முடிவு செய்திருந்தார். மக்களுக்கு அளித்த மறுமலர்ச்சி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருந்ததில் அதிக ஏமாற்றமடைந்தவர்களில் நூருல் இஸாவும் ஒருவர். ஆனால், தனது தொகுதியில் அவர் நிறைவான சேவையை வழங்கி வருகிறார் என்று கேள்விப்படு கின்றேன். வரும் சிலிம் இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டால் அவர் மீண்டும் அரசியல் மேடையில் முழங்கும் சூழ்நிலை உருவாகலாம் என நினைக்கின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 5 =