வரலாறு படைத்தது ஓம்ஸ் அறவாரியம்

ஓம்ஸ் அறவாரியம் மீண்டும் ஒரு வரலாறு படைத்திருக்கிறது. அதன் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜனின் கொடைநெஞ்சத்தின் இன்னொரு உதாரணம் அண்மையில் அரங்கேறியது. நான் எப்போதும் எல்லா மேடைகளிலும் ஒன்றைப் பதிவு செய்வது உண்டு… இந்த நாட்டில் ஒரு தலைவர் செய்யாததை, ஒரு கட்சி செய்யாததை, ஓர் அமைச்சர் செய்யாததை, ஏன் சில வேளைகளில் அரசாங்கமே செய்யாததைச் செய்து காட்டியவர் ஓம்ஸ் தியாகராஜன் என்று…!

ஓர் அரசாங்கம் செய்யாததை, ஓர் அமைச்சர் செய்யாததை செய்திருக்கிறார் செந்தமிழ்ச் செல்வர்

பணம் படைத்த செல்வந்தர்கள் எல்லாம் இந்த சமுதாயத்திற்கு எடுத்தவுடன் எதையும் கொடுத்துவிடுவார்கள் என்று ஏதுமில்லை. இருப்பவர்கள் எல்லாம் கொடுத்து விடும் மனம் படைத்தவர்களும் இல்லை. அதனால்தான் பணமிருக்கும் மனிதர்களிடம் மனம் இருப்பதில்லை என்று சொன்னார் கண்ணதாசன்.
ஆனால் இந்த சமுதாயத்தின் உயர்வுக்கும் குறிப்பாக மாணவர்களின் உயர்வுக்கும் நமது கல்வி அடைவு நிலைகளுக்கும் மொழி, கலை, கலாசார பண்பாட்டு உயர்வுகளுக்கும் தொடர்ந்து ஓம்ஸ் அறநிறுவனத்தை ஒரு கவசமாய் உருவாக்கி இன்றும் அதைச் செய்து கொண்டிருக்கிறார் ஓம்ஸ் தியாகராஜன்.
அந்த வகையில் ஏழே வயதில் 20க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களை வாகைசூடி இளம் வீராங்கனை யாகத் திகழும் ஸ்ரீ அபிராமி என்ற அந்த மாணவி, இன்னும் 7 ஆண்டுகளில் ஒரு ஒலிம்பிக் சாம்பியனாக உருவாக இப்போதே அவருக்கு ஒரு நிதி அடித்தளத்தை ஏற்படுத்திய ஓம்ஸ் தியாகராஜனின் அந்த பெருமனம் யாருக்கு வரும்?
ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் 8 லட்சம் வெள்ளியை அந்த இளம் வீராங்கனைக்கு வழங்குவதாக அது தொடர்பான ஓர் ஒப்பந்தமும் உருவாகி ஒரு வரலாறு இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தச் சிறுமியின் தந்தை சந்திரன் அரசாங்க உதவியை நாடிச் சென்றார். கிடைக்கவில்லை…
இந்தியர்களை கைதூக்கி விடும் பிரிவு என்று அறிவிக்கப்பட்ட ’மித்ரா நாடினார். அங்கும் அவருக்கு கதவு மூடப்பட்டது. விளையாட்டுத் துறைக்கெல்லாம் நிதி தரமாட்டோம் என்று வேதமூர்த்தி சொல்லிவிட்டாராம். இந்த நிலையில் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், இந்த இளம் வீராங்கனையை ஓம்ஸ் அறவாரியத்தின் பார்வைக்குக் கொண்டுவந்தது. 3 வயது முதல் 7 வயதுக்குள் 10 நாடுகளுக்குச் சென்று போட்டிகளில் வெற்றிபெற்றுத் திரும்பியவர் அபிராமி. அண்மையில் கூட பேங்காக்கில் நடைபெற்ற பனிச்சறுக்குப் போட்டியில் 4 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் ஆகிய பதக்கங்களை மிக அசாத்தியமாக வாகைசூடி வந்தவர். இவர் அடுத்தடுத்து வெற்றிப்படிக்கட்டுகளில் ஏற குறிப்பாக ரஷ்யாவில் சென்று பயிற்சி பெற 27 லட்சம் வெள்ளி தேவைப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தமது பங்காக 8 லட்சம் வெள்ளியை ஓம்ஸ் நிறுவன குழுமம் வழங்குகிறது.

இந்திய சமுதாயம் துணைநின்று
இளம் வீராங்கனையை வெற்றிப்படிக்கட்டில் ஏறவைப்போம்

வரும் செப்டம்பர் 16ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டுக் கல்லூரியில் 2 வார பயிற்சிக்குச் செல்கிறார் அபிராமி. ஓம்ஸ் நிறுவன குழுமத்தோடு தமிழ் மலர் நாளிதழும் இணைந்து அவருக்கு இந்த உதவியைச் செய்கிறது. சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்ற அலுவலகத் தில் பனிச்சறுக்கு விளையாட்டு அமைப்பின் தலைவர் முகமட் ஸாஹிர் ஷே மன்சோர் ஆலோசனையில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் நடைபெற்றது. கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத் தலைவர் கருப்பையா தலைமையில் அதன் பொறுப்பாளர்களும் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் க.முருகன், சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்ற துணை இயக்குனர் பூஸ்டின் ரசாக் உட்பட ஏராளமான நன்னெஞ்சர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஓம்ஸ் தியாகராஜன் ஒன்றைச் சொன்னார்.


இத்தனை சிறிய வயதில் இவ்வளவு பெரிய திறமைபெற்ற அபிராமிக்கு அரசாங்கம் உதவ வேண்டும். இந்நாட்டில் உள்ள அனைத்து இந்திய இயக்கங்களும் இந்திய சமுதாயமும் உதவ வேண்டும். என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன்.
உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள் என்றார். ஒரு முறை மறைந்த நகைச்சுவை நடிகர் தங்கவேலு சொன்னார்: அடுப்பில் உலை வைத்துவிட்டு நம்பி ஒரு வீட்டின் கதவைத் தட்டலாம் என்றால் அது பொன்மனச் செம்மல் எம்ஜிஆரின் வீடு என்று சொன்னார்.
அத்தகைய பொன்மனம் நிறைந்த செந்தமிழ்ச்செல்வரின் இந்த உதவி உங்கள் இதயக் கதவுகளையும் திறக்கட்டும். நீங்களும் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். அபிராமி நாடு போற்றும் ஒரு மாபெரும் வீராங்கனையாக மாற ஒவ்வொருவரும் துணை நில்லுங்கள். விரைவில் அறநிதி ஒன்று ஆரம்பமாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =