வட்டார விமானச் சேவை மீட்சியடைகிறது

நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலத்தில் விமானச் சேவைகள் முடக்கம் கண்ட பின்னர், தற்போது உள்ளூர் விமானப் பயணங்கள் 50 லிருந்து 70 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக ஏர் ஆசியா குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து வட்டாரங் களுக்கான விமானப் பயணங்கள் சூடு பிடிக்கத் தொடங்கி, 41,000 இருக்கைகளுக்குப் பதிவு செய்யப்பட்டு 170 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் ஏர் ஆசியா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. கூச்சிங், கோத்தா கினபாலுவிலிருந்து கோலாலம்பூருக்கும் தாய்லாந்தில் பேங்காக்கிலிருந்து சியாங் மாய் மற்றும் ஹட் யாய், பிலிப்பைன்ஸ் மணிலாவிலிருந்து போர்ட் ஆஃப் பிரின்ஸ், டாவோவுக்கும், இந்தியா, டில்லியிலிருந்து ஸ்ரீநகர், பெங்களூரு, ஹைதராபாத், இந்தோனேசியா, ஜாகர்த்தாவிலிருந்து டென்பசார் மற்றும் மேடானுக்கும் அதிகமான முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானப் பயண அதிகரிப்பு வரும் வாரங்களில் மென்மேலும் அதிகரிக்கும் என்று ஏர் ஆசியா குழுமத் தலைவர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
தேவையைப் பூர்த்தி செய்ய ஏர் ஆசியா 50 விழுக்காட்டு சேவைகளை அதிகரிக்கும் என்றும் உள்ளூர் சேவைகள் முன்போல அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இவ்வட்டாரத்தில் ஏர் ஆசியா 152 இடங்களுக்குச் சேவையை வழங்கி வருகிறது.
ஏர் ஆசியா அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்த பல முறை பயன்படுத்தப்படும் விமான டிக்கெட்டு முறையை மற்ற பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
உள்ளூர் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க டிக்கெட் விற்பனையோடு ஹோட்டல் வசதிகளையும் செய்துதர நிர்வாகம் முயலும் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளூர் பயணங்களுக்கு ஏர் ஆசியா தற்போது 20 விழுக்காட்டுக் கழிவினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 20 =