வங்கிக் கடன் 6 மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், கிரெடிட் கார்டுகளைத் தவிர்த்து அனைத்து வங்கிக் கடன்களையும் திருப்பிச் செலுத்துவது ஆறு மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பேங்க் நெகாரா மலேசியா அறிவித்துள்ளது.ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், அனைத்து கடன்கள் மற்றும் நிதி திருப்பிச் செலுத்துதல்களுக்கு ஆறு மாத காலத்தை வங்கிகள் தள்ளிவைக்க பேங்க் நெகாரா மலேசியா வழிவகுத்துள்ளது.
ஏப்ரல் 1, 2020 முதல் ஆறு மாத காலத்திற்கு, தனிநபர்களுக்கும் கடன் பெற்றவர்களுக்கும் / வாடிக் கையாளர்களுக்கும் வங்கி நிறுவனங்கள் அனைத்து கடன்கள் / நிதி திருப்பிச் செலுத்துதல் / கொடுப்பனவுகள், அசல் மற்றும் வட்டி (கிரெடிட் கார்டு தவிர) ஆகியவற்றில் ஒரு தற்காலிக நிறுத்திவைப்பை)வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
கோவிட்-19 பாதிப்பின் விளைவாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் )மற்றும் தனிநபர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதே இதன் குறிக்கோள் என்று பேங்க் நெகாரா மலேசியா துணை ஆளுநர் ஜெசிகா நேற்று அனைத்து வங்கி நிறுவனங்களுக்கும் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வசதிக்கு தகுதி பெற, ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன், 90 நாட்களுக்கு மேலான நிலுவைத் தொகையை கொண்டி ருக்கக்கூடாது மற்றும் கடன் ரிங்கிட் நாணயத்தில் இருக்க வேண்டும் என்பதே.


“இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதியில் இடைநிறுத்தப்பட்ட கடன் அல்லது திருப்பிச் செலுத்துதல் எவ்வாறு நடத்தப்படும் என்பதற்கான போதுமான தகவல்களை வங்கி நிறுவனங்கள் தனிநபர்களுக்கும் ளுஆநுகளுக்கும் வழங்க வேண்டும். அதோடு, கடன் பெற்றவர்களுக்கு / வாடிக்கையாளர்களுக்கு இடைக்கால காலத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்துதலை மீண்டும் தொடங்குவதற்கான வழிமுறைகளையும் அளிக்க வேண்டும். குறிப்பாக கடன் பெற்றவர்களுக்கு / வாடிக்கையாளர்களுக்கு இடைக்கால காலத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்துதல் / கொடுப்பனவுகளைச் சந்திப்பதில் இன்னும் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் எதிர்பார்த்தால் அவர்களுக்கு செலுத்துதலை தொடங்குவதற்கான முறையான வழிகள் வழங்கப்பட வேண்டும் என்று பேங்க் நெகாரா மலேசியா கடிதத்தில் கூறியுள்ளது.
கடன் தவணை ஒத்திவைப்பு
என்றால் என்ன?

கடனுடன் சேர்ந்த வட்டித் தொகையை செலுத்தும் கடப்பாட்டை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகும். இந்தக் காலகட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் எந்த தொகையையும் வங்கிக்கு செலுத்தத் தேவையில்லை. அப்படி அவர்கள் தவணை செலுத்தத் தவறியதற்காக காலதாமத கட்டணத்திற்கான வட்டியும் அதிகபட்ச வட்டியும் வசூலிக்கப்படாது. ஆனால், காலதாமதமாக கட்டப்படும் இந்தத் தவணைத் தொகைக்கான வட்டி தொடரும். வாடிக்கையாளர்கள் வருங்காலத்தில் கடனைக் கட்டி முடிக்கும் தருவாயில் இந்த கடனுக்கான வட்டித் தொகையை சேர்த்து கட்ட வேண்டும். ஒத்திவைக்கும் காலம் முடிந்த உடன் வாடிக்கையாளர்கள் வங்கியில் தங்களது தவணைத் தொகையை வழங்கம் போல் கட்ட வேண்டும்.


கடன் தவணை ஒத்திவைப்பின்
நோக்கம் என்ன?

கடன் தவணை ஒத்திவைக்கும் சலுகைக்கான நோக்கம், கோவிட் 19 தொற்று நோயின் காரணமாக தனி நபர் மற்றும் சிறு தொழில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பண நெருக்குதலுக்கு தற்காலிகமாக நிவாரணம் அளிப்பதாகும்.


இந்த சலுகைக்கு யார்
தகுதி பெறுகின்றனர்?

வழக்கமான வங்கிக் கடன், மேம்பாட்டு பொருளாதார வங்கி கடன் மற்றும் இஸ்லாமிய கடனுதவி பெற்றுள்ள தனிநபர்கள் மற்றும் சிறிய நடுத்தர வர்த்தகர்கள் இயல்பாகவே இந்த சலுகைக்கு தகுதி பெறுகிறார்கள். (கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது). ஆனால்;

  • அவர்களது கடன் பாக்கி 1 ஏப்ரல் 2020 அன்று 90 நாட்களுக்கு மேல் போகாமல் இருக்க வேண்டும்.
  • அவர்களது கடன் மலேசிய ரிங்கிட்டில் பெறப்பட்டிருக்க வேண்டும்.

இந்த சலுகைகள் பெறுவதற்கு தகுதி பெறாதவர்கள் வர்த்தக கடன் பெற்றிருந்தால் அவர்கள் தங்களது வங்கிகளிடம் தவணை ஒத்திவைப்பதற்கான கால அவகாசத்தை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.


ஒத்திவைப்பு 6 மாத காலம் மட்டும் தானா?

இந்த இயல்பான கடன் தவணை ஒத்திவைப்புக் காலம் 6 மாதம் மட்டுமே. அதற்கு மேற்பட்ட கால அவகாசம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கியிடம் கால நீட்டிப்பிற்கு விண்ணப்பம் செய்யலாம்.

இந்தக் கால ஒத்திவைப்பினால் பெயர்
கருப்புப் பட்டியலில் இடப்படுமா?

இல்லை. ஆனால், காலதாமதமாக கட்டப்படும் இந்தத் தவணைத் தொகைக்கான வட்டி தொடரும். வாடிக்கையாளர்கள் வருங்காலத்தில் கடனைக் கட்டி முடிக்கும் தறுவாயில் இந்த கடனுக்கான வட்டித் தொகையை சேர்த்து கட்ட வேண்டும்.

தவணை ஒத்திவைப்பிற்கு
விண்ணப்பம் செய்ய வேண்டுமா?

இவர்களது கடன் ஒத்திவைப்பு தகுதி பெறுபவர்களுக்கு விண்ணப்பம் இன்றி இயல்பாகவே ஒத்திவைக்கப்படுகிறது.

நான் ஏற்கெனவே கடனைத் திருப்பி செலுத்துவதில் தாமதம் செய்துள்ளேன். இந்த கால ஒத்திவைப்பிற்கு நான் தகுதி பெறுவேனா?
கடன் பாக்கி 1 ஏப்ரல் 2020 அன்று 90 நாட்களுக்கு மேல் உள்ளவர்கள் இந்த சலுகைக்கு தகுதி பெறமாட்டார்கள். ஆனால், அவர்கள் தங்களது வங்கியை அணுகி இதற்கான விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு முன்பு கடன் மறு சீரமைப்பு செய்துள்ளவர்கள் இந்த சலுகையைப் பெற முடியுமா?

கடன் வங்கியுடன் மறு சீரமைப்பு செய்து கொண்டுள்ளவர்களும் மேற்குறிப்பிட்ட தகுதி பெற்றவர்களாக இருந்தவர்கள் இந்தத் தகுதியைப் பெறலாம்.

தற்சமயம் மற்ற வங்கிகள் அறிவித்துள்ள சலுகைக்கும் இந்த சலுகைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

வங்கிகள் மற்றும் மேம்பாட்டு பொருளாதார வங்கிகள் தற்சமயம் தங்களது வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு பலவிதமான கடன் மறு சீரமைப்பு, தவணை திருப்பி செலுத்துதல் தொடர்பான மறுசீரமைப்பு போன்ற சலுகை
களை அவர்களுக்கு வழங்கி வருகின் றனர். இதுபோன்ற இக்கட்டான காலகட் டத்தில் அவர்களது முயற்சிகள் வரவேற் கப்படுகின்றன, ஊக்குவிக்கப்படுகின்றன.
தங்களது வங்கிகள் வழங்கியுள்ள கடன் மறு சீரமைப்பு, தவணை திருப்பி செலுத்துதல் தொடர்பான மறுசீரமைப்பு போன்ற சலுகைகளை ஏற்றுக்கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் அதிலிருந்து தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள சலுகையை ஏற்றுக் கொள்ள முன்வரலாம்.


எந்த வங்கிகள் இந்த ஒத்திவைப்பு
சலுகையை வழங்குகின்றன?

அனைத்து அதிகாரப்பூர்வ வங்கிகளும், இஸ்லாமிய வங்கிகளும், பேங்க் நெகாராவால் மேற்பார்வை செய்யப்படும் குறிப்பிட்ட மேம்பாட்டு பொருளாதார வங்கிகளும் இந்த தவணை ஒத்திவைப்பு சலுகையை வழங்குகின்றன.
வங்கி எனது பெயரை இந்த தவணை ஒத்திவைப்பு சலுகையில் இணைத்துள்ளதை எப்படி தெரிந்து கொள்வது?
வங்கிகள் தனிநபர் வாடிக்கையாளர் களுக்கும், சிறு தொழில் வர்த்தக கடன் பெற்றுள்ளவர்களுக்கும் இந்த தவணை ஒத்திவைப்புத் தகவலை போதுமான வகையில் தெரியப்படுத்துவார்கள். சம்பந் தப்பட்ட வங்கிகள் அதன் அகப்பக்கங்களில் இது தொடர்பான தகவலை வெளியிடலாம், அல்லது பொது அறிவிப்பின்படி அவர்கள் தெரிவிக்கலாம்.


நான் இந்த சலுகையைப் பெற விரும்பவில்லை, என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் உங்கள் வங்கிகளைத் தொடர்பு கொண்டு வங்கித் தவணையை முறையாக குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த விரும்புவதாகக் கூறி இந்த சலுகையிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளலாம்.
நான் சுற்றுலாத் துறையில் இருக்கின்றேன், அண்மைய சம்பவம் எனது பொருளாதாரத்தை அதிகமாக பாதித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் எனது மாத கடன் தவணையைச் செலுத்த மிகவும் சிரமப்பட்டு வருகின்றேன். என் கையில் இருக்கும் சேமிப்புகள் குறைந்து வருகின்றன

நான் இந்த கடன் தவணை ஒத்திவைப்பு சலுகைக்கு தகுதி பெறுகிறேனா?
ஆம். ஆனால், உங்கள் கடன் பாக்கி 1 ஏப்ரல் 2020 அன்று 90 நாட்களுக்கு மேல் போகாமல் இருக்க வேண்டும்.

இந்த 6 மாத கால தவணை ஒத்திவைப்பிற்கு மேற்கொண்டு வட்டி விதிக்கப்படுமா?
வழக்கமான வங்கிக் கடனுக்கு கடன் பாக்கி மற்றும் 6 மாதத்திற்கு கட்ட வேண்டிய வட்டி ஆகிய இரண்டிற்கும் சேர்த்து வட்டி விதிக்கப்படும்.
ஆனால், இந்த 6 மாத காலத்திற்கு வங்கிகள் காலதாமத வட்டி செலுத்து வதற்கான கட்டணத்தை வசூலிக்க முடியாது.
இஸ்லாமிய வங்கிக் கடனுக்கு பாக்கித் தொகையின் மீத வங்கிக்கான லாபம் தொடர்ந்து கணக்கிடப்படும். ஆனால், லாபத்தின் மீது லாபக் கணக்கைக் கோரும் நடவடிக்கை இருக்காது. காரணம் அது ஷரியா சட்டத்திற்கு உட்பட்டது அல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × five =