லோவின் பிள்ளைகளின் மத மாற்றத்தை எதிர்க்கும் முயற்சி: பாஸ் கடும் கண்டனம்

  தனித்து வாழும் தாய் லோ சியூ ஹோங்கின் பிள்ளைகளை இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதை ரத்து செய்யும் முயற்சியை பாஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும் என்று எச்சரித்துள்ளது.
  அந்தப் பிள்ளைகளை இஸ்லாத்திலிருந்து மதம் மாற்றும் நடவடிக்கையைப் பாஸ் கட்சி கடுமையாகக் கருதுவதாக அதன் தகவல் தொடர்புத் தலைவர் கைரில் நிஸாம் கிருடின் தெரிவித்தார்.
  லோவின் பிள்ளைகள் இஸ்லாத்தைப் பற்றிய ஞானம், புரிதல், சுயமாக முடிவெடுத்தல், அதைப் பற்றிய கல்வியின் காரணமாகவே இஸ்லாத்தில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
  கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் பிள்ளைகளைப் பராமரிக்க மட்டுமே அனுமதி அளித்துள்ளதாகவும், அவர்களை மதம் மாற்றவோ, அதிலிருந்து விலகவோ கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
  அரசியல்வாதிகள், கல்விமான்கள், முஃப்திகள், சமய பிரசாரகர்கள், அரசு சாரா இயக்கத்தினர், மலேசிய முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமயத்தைப் பாதுகாக்கவும் லோவின் பிள்ளைகள் வேறு மதத்திற்கு மாற்றுவதை எதிர்க்கவும் வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.
  தமது பிள்ளைகளை தமது முன்னாள் கணவர் இஸ்லாத்திற்கு மாற்றியது செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று அவர் கடந்த வெள்ளிக்கிழமை, உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
  பெற்றோர் ஒருவரின் சம்மதத்தின் பேரில் மதம் மாற்றுவதை அனுமதிக்கும் பெர்லிஸ் மாநிலச் சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
  மேலும், தமது பிள்ளைகள் இன்னமும் இந்து மதத்தில் இருப்பதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
  தமது பிள்ளைகள் சிறு பிள்ளைகளாக இருப்பதால், அவர்கள் எதையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுக்கும் நிலையில் இல்லாதிருப்பதால், அவர்களை மதம் மாற்றுவதற்கு முன்னர் தமது சம்மதத்தைக் கேட்டிருக்க வேண்டுமென தமது அஃபிடவிட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது பிள்ளைகளைத் தமது முன்னாள் கணவர் 2020 ஜூலை 7ஆம் தேதி தமது சம்மதமின்றி மதம் மாற்றியதை தேசிய பதிவிலாகாவில் இருந்து ரத்து செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
  தமது மனுவில் அவர் முவாலாஃப் பதிவதிகாரி, சமய, பெர்லிஸ் மலாய் பாரம்பரிய கவுன்சில், மாநில முஃப்தி அஸ்ரி ஸைனுல் அபிடின், மாநில அரசு ஆகியோரைப் பிரதிவாதிகளாக லோ குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி கோலின் லோரன்ஸ் செக்கூரா, லோவின் பிள்ளைகளை அவரே பராமரிக்க வேண்டுமென உத்தரவைப் பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  seventeen + one =