லிம் குவான் எங் மீது இரு நில வழக்குகள்

0

பினாங்கு மாநில அரசின் இரு நிலங்களை சட்டவிரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதாக முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமாஸ் அஷாரி அப்துல் ஹமிட் முன்னிலையில் அக்குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
2015 பிப்ரவரி 17ஆம் தேதி, பண்டார் தஞ்சோங் பினாங்கில் உள்ள 135 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய நிலத்தை குவான் எங், எவீன் ஸெனித் நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுத்ததாக அவர் மீது முதல் குற்றம் சுமத்தப்பட்டது.
இரண்டாவதாக, 2017 மார்ச் 22ஆம் தேதியன்று, பண்டார் தஞ்சோங் பினாங்கில் உள்ள 73.6 மில்லியன் ரிங்கிட் பெறுமான நிலத்தை ஸெனித் அர்பன் மேம்பாட்டு நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த இரண்டு குற்றங்களும் குற்றவியல் சட்டம், பிரிவு 403இன் கீழ் சுமத்தப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றத்திற்கும் 6 மாதத்திலிருந்து 5 ஆண்டுகள் வரையிலுமான சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படியும் தர சட்டம் வகை செய்கிறது.
அந்த வழக்குகள் யாவும் கடலடி சுரங்கப் பாதை நிர்மாணிப்பு வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவை யாகும்.
இந்த வழக்குகளில் அரசின் சார்பில் வான் ஸஹாருடின் வான் லாடின், ஃபிரான்சைன் செரில் ராஜேந்திரம் மற்றும் செல்வரஞ்சினி செல்வராஜா ஆகியோர் ஆஜரான வேளையில், லிம் குவான் எங்கிற்கு கோபிந்த் சிங் டியோ மற்றும் ராம் கர்ப்பால் சிங் ஆகியோர் ஆஜராகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =