லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கு ஒத்தி வைப்பு

file pic

முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங், அவரது துணைவியார் பெட்டி சியூ, தொழிலதிபர் ஃபாங் லி கூன் ஆகியோர் மீதான வழக்குகள் இரு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
11.6 மில்லியன் ரிங்கிட் பெறுமான கட்டுமானக் குத்தகையில் சட்டவிரோதமாக கையூட்டு பெற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளன.
அவர்கள் மீதான வழக்குகள் சம்பந்தமாக அதிகமான ஆவணங்களைப் பெற்றிருப்பதோடு இன்னும் எஞ்சியவை பெறப்பட வேண்டியிருப்பதால், அவற்றைப் படித்துப் புரிந்து கொள்ள கால அவகாசம் தேவை என்பதால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டுமென்று மேற்கண்டோரின் வழக்கறிஞர் ஆர் எஸ்.என்.ராயர் கோரிக்கை விடுத்தார்.
அதனை அரசின் துணை வழக்கறிஞர் செல்வரஞ்சனி செல்வராஜாவும் ஒப்புக் கொண்டதை அடுத்து, செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமாட் அஸாரி ஹமிட் வழக்கின் முதல் வாசிப்பை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டார்.
ஜுரு மற்றும் பத்து காவான் எனும் இடங்களில் தொழிலாளர் குடியிருப்புகளை நிர்மாணிக்கும் குத்தகையை மேக்னிஃபிஸன்ட் எம்லம் நிறுவனம் பெற, லிம் குவான் எங்கின் துணைவியார் பெட்டி சியூவின் வங்கிக் கணக்கில் 372,009 ரிங்கிட் பணம் செலுத்தப்பட்டதாக அவர்கள் மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர்கள் மீது 2001ஆம் ஆண்டு, பண மோசடி, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்தல், சட்டவிரோதமான நடவடிக்கையின் மூலம் வருமானத்தைப் பெறுதல் சட்டம், மலேசிய ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் வழியும் குற்றங்கள் சுமத்தப்பட்டன.
தமது துணைவியார் மேற்கண்ட பணத்தைப் பெற லிம் குவான் எங் உதவி செய்ததாகவும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் லிம்முக்கு 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை, சம்பந்தப்பட்ட பணத்துக்கு 5 மடங்கு அபராதமும் விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =