ரோஸ்மாவுக்காக உருவாக்கப்பட்ட 2.3 கோடி டாலர் வைர நெக்லஸ் -விலைப்பட்டியலைப் பார்வையிட்டனர்

ஜூரிகள்1எம்டிபி நிறுவனத்திடமிருந்து கையாடப்பட்ட பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட ஆபரணங்களின் விலைப்பட்டியல்களைப் பார்வையிடும் வாய்ப்பு அமெரிக்க நீதிமன்ற ஜூரிகளுக்கு நேற்று முதன்முறையாகக் கிட்டியது.
நியூயார்க்கில் தற்போது நடைபெற்றுவரும் கோல்டுமேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியின் முன்னாள் வங்கியாளர் ரோஜர் இங் என்பவருக்கு எதிரான வழக்கில் அந்த விலைப்பட்டியல்களை அவர்கள் முதன்முறையாகப் பார்வையிட்டனர்.
முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மாவுக்குப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட சிவப்புநிற வைரம் பதித்த நெக்லஸ் ஒன்றின் விலைப்பட்டியலும் அவற்றிலும் அடங்கும். அதன் மொத்த மதிப்பு இரண்டு கோடியே முப்பது லட்சம் டாலர் ஆகும். ரோஸ்மாவுக்காக நியூயார்க்கின் பெருமைமிக்க ஆபணரத் தயாரிப்பாளரான லோரேன் ஷ்வார்ட்ஸ் என்பவரால் விஷேமாக அந்த வைர நெக்லஸ் தயாரிக்கப்பட்டது. இருந்த போதிலும், அந்த வைரநெக்லஸை ஜூரிகளால் நேற்று நேரடியாகப் பார்வையிட முடியவில்லை. அதன் விலைப்பட்டியலை மட்டுமே அவர்கள் பார்வையிட்டனர். அந்த நெக்லஸின் புகைப்படம்கூட அவர்களிடம் காட்டப்படவில்லை,
மலேசியாவின் 1எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்த பல கோடி டாலர் மோசடி தொடர்பான வழக்கு விசாரணை புரூக்லின் கூட்டரசு நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் முன்னிலையாகியிருக்கும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், தற்போது தங்களின் வாதத்தொகுப்பை சமர்ப்பித்து வருகின்றனர். 1எம்டிபி நிறுவனத்திற்கான கடனீட்டுப் பங்குகள் விற்பனை தொடர்பான மூன்று பரிமாற்ற நடவடிக்கைகள் மூலம் தொழிலதிபர் ஜோலோ எவ்வாறு 650 கோடி டாலரை திசைதிருப்பி ஆடம்பரப் பொருள்களை வாங்கினார் என்று ஜூரிகளிடம் அவர்கள் விளக்கினர்.
‘தி வோல்ஃப் ஆஃப் வால் ஸ்திரீட்’ எனும் படத்தைத் தயாரிப்பதற்காக நஜிப்பின் வளர்ப்பு மகன் ரீஸா அஸிஸூக்கு 1எம்டிபி பணத்தை வழங்கியதாகவும் ஜோலோ மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜோலோ கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் லோரேன் ஷ்வார்ட்ஸூடன் தொடர்பு கொண்டு ரோஸ்மாவுக்காக இதய வடிவிலான சிவப்புநிற வைரக்கல் பதித்த நெக்லஸ் ஒன்றைத் தயாரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். ரோஸ்மா தமக்கு 18 கேரட் வைரம் பதித்த நெக்லஸ் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், தம்மிடம் 22கேரட் சிவப்பு வைரம் மட்டுமே இருப்பதாக ஷ்வார்ட்ஸ் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, இரண்டு கோடியே முப்பது லட்சம் டாலர் செலவில் சிவப்புக் கல் பதிக்கப்பட்ட நெக்லஸ் வாங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது.
அந்த நெக்லஸை ஷ்வார்ட்ஸே நேரடியாக ரோஸ்மாவிடம் ஒப்படைத்தார். மொனாக்கோ நாட்டின் கரையோரப் பகுதியில் உல்லாசக் கப்பலில் ரோஸ்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ஜோலோவும் அக்கப்பலில்தான் இருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, 2014ஆம் ஆண்டில் ஷ்வார்ட்ஸிடமிருந்து மேலும் 13 லட்சம் டாலர் மதிப்புடைய நகைகளையும் ரோஸ்மா வாங்கியுள்ளார் என்றும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோல்டுமன் சாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் வங்கியாளர் ரோஜர் இங் தமது மேலாளர் டிம் லீஸ்னருடன் சேர்ந்து 1எம்டிபிக்குச் சொந்தமான கடனீட்டுப் பங்குகள் விற்பனை தொடர்பில் கோடிக்கணக்கான பணத்தைக் கையாடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அக்குற்றம் புரிந்ததை லீஸ்னர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், ரோஜர் குற்றத்தை ஒப்புக் கொள்ளாததால் விசாரணையை எதிர்நோக்கி வருகிறார். ஜோலோ மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும் அவர் இன்னும் தலைமறையாகவே இருந்து வருகிறார். நஜிப் மற்றும் ரோஸ்மா மீது அமெரிக்காவில் குற்றம் சுமத்தப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 12 =